தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் வேலையில்லாதோருக்கான உதவிகள் குறித்து அமைச்சரின் பதில்கள்

Posted On: 19 JUL 2021 2:53PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து வருடாந்திர மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொழிலாளர்  ஆய்வு நடத்தப்படுகிறது.

ஏப்ரல்-ஜூன் 2020-க்கான குறிப்பிட்ட கால இடைவெளி தொழிலாளர்

ஆய்வின் காலாண்டு அறிக்கையின் படி, ஜூலை-செப்டம்பர் 2019, அக்டோபர்-டிசம்பர் 2019, ஜனவரி-மார்ச் 2020 மற்றும் ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டுகளுக்கான 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3%, 7.8%, 9.1% மற்றும் 20.8% ஆக உள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம், பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட கால இடைவெளி தொழிலாளர் ஆய்வின் படி, 2018-19 ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்தது.

தற்சார்பு நிதி தொகுப்பின் கீழ் ரூ 27 லட்சம் கோடியை அரசு வழங்கியுள்ளது. நாட்டை தற்சார்பாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பல்வேறு நீண்டகால திட்டங்கள் தற்சார்பு இந்தியா தொகுப்பில் உள்ளன.

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் நிறுவன பங்கு 12 சதவீதம் மற்றும் பணியாளர் பங்கு 12 சதவீதம் ஆகிய இரண்டையும் 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை இந்திய அரசு செலுத்தியது. இதன் மூலம், தகுதியுடைய 38.82 லட்சம் நபர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் ரூ 2567.66 கோடி செலுத்தப்பட்டு, வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவியது.

கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், ஊரக பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ 27 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை அரசு வழங்கியுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌஷல்யா திட்டம், தீன்தயாள் அந்தோத்யா திட்டம்-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி ஒரு நாளைக்கு ரூ 182-ல் இருந்து ரூ 202 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736733

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736735

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736736

*****************



(Release ID: 1736907) Visitor Counter : 306


Read this release in: English , Urdu , Bengali , Punjabi