மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

தேசிய மீன் விவசாயிகள் தினத்தை தேசிய மீன் வளர்ச்சி வாரியம் காணொலி மூலம் கொண்டாடியது

Posted On: 10 JUL 2021 7:25PM by PIB Chennai

தேசிய மீன் விவசாயிகள் தினத்தை தேசிய மீன் வளர்ச்சி வாரியம் காணொலி மூலம் கொண்டாடியது. நாடு முழுவதுமுள்ள மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் திரு எல் முருகன், திரு ஜதீந்திர நாத் ஸ்வைன், செயலாளர் (மீன்வளம்), டாக்டர் சி சுவர்ணா, தலைமை நிர்வாகி, தேசிய மீன் வளர்ச்சி வாரியம், டாக்டர் ஜே பாலாஜி, இணை செயலாளர் (கடல்சார்) மற்றும் திரு சாகர் மெஹ்ரா, இணை செயலாளர் (உள்நாடு) மற்றும் இந்திய அரசின் மீன்வள துறை மற்றும் தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தின் இதர அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது உள்நாட்டு மீன் நுகர்வு குறித்த விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்ட மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர், உள்நாட்டு மீன் நுகர்வு குறித்து நடத்தப்பட்ட வாசக போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமரின் மத்சய சம்பதா திட்டம் மற்றும் தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களால் பலன் பெற்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீன் விவசாயிகள்/தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், மூன்று பக்கங்களும் பரந்து விரிந்த கடற்பரப்பு உள்ளதால் மீன்வள துறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளுடன் இந்தியா பலனடைந்துள்ளதாக தெரிவித்தார். இத்துறையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ள அரசு, பிரதமரின் மத்சய சம்பதா திட்டத்தை தொடங்கியதாக அமைச்சர் கூறினார். இத்திட்டத்தின் கீழ், மீனவர்கள்/மீன் விவசாயிகளுக்கு மீன் விவசாயம், உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம், விதை மற்றும் உணவு கொள்முதல், மீன்பிடி செயல்பாடுகள் ஆகியவற்றில் நிதி உதவி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் திரு எல் முருகன், வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாக ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இதை பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த ஆதாரமாக மீன்வளம் திகழ்வதாகவும் கூறினார்

பிரதமரால் அறிவிக்கப்பட்ட பிரதமரின் மத்சய சம்பதா திட்டம் தற்சார்பு இந்தியாவின் கீழ் ஒரு கனவு திட்டம் என்றும் அவர் கூறினார். இத்திட்டம் மீன் உற்பத்தியை கட்டாயம் அதிகரிப்பதோடு, மீனவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும். மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்குவதற்காக பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

சுமார் 500 மீன் விவசாயிகள், கடல்சார் தொழில்முனைவோர் மற்றும் மீனவர்கள், தொழில் நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் நாடு முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734463

----



(Release ID: 1734491) Visitor Counter : 237


Read this release in: English , Urdu , Hindi , Marathi