உள்துறை அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மலைப் பிரதேசங்கள், சுற்றுலாத் தலங்களில் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர் ஆய்வு

Posted On: 10 JUL 2021 6:17PM by PIB Chennai

மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகம், கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில்  கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பூசி நிலவரத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மலைப் பிரதேசங்கள் மற்றும் இதர சுற்றுலாப் பகுதிகளில் கொவிட் சரியான நடத்தை விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று ஊடக செய்திகள் தெரிவித்திருப்பது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்தார்.

தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை; முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் இதர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை மாநிலங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இரண்டாவது அலையின் சரிவு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாறுபட்டுள்ளது, ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் குறைந்து வரும் நிலையிலும், தமிழகம், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்று உறுதி வீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தவாறு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளைக் கடைபிடிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. எதிர்வரும் காலத்தில் தொற்று பரவல் அதிகரித்தால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக இருக்க வேண்டும் (குறிப்பாக ஊரக, பழங்குடி பகுதிகளில்) என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர், எட்டு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734444

 

----



(Release ID: 1734461) Visitor Counter : 246