வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்திய-இத்தாலி கூட்டு ஆணையத்தின் 21-வது கூட்டம்

Posted On: 10 JUL 2021 3:05PM by PIB Chennai

பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்திய-இத்தாலி கூட்டு ஆணையத்தின் 21-வது கூட்டம் 2021 ஜூலை 9 அன்று காணொலி மூலம் நடைபெற்றது.

வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் திரு லுய்கி டி மாயோ கூட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் உணவு பதப்படுத்தல், ஜவுளி, தோல், ரயில்வே, புது நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இருதரப்பு சந்தை அணுகல் பிரச்சினைகள், கட்டணம் சாராத தடைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போர்டோ, போர்ச்சுக்கலில் நடைபெற்ற இந்திய-ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் உச்சி மாநாட்டின் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கொவிட் தடுப்புமருந்து சான்றிதழின் பரஸ்பர அங்கீகாரம், பயண தடைகளை நீக்குதல், வர்த்தக விசாக்களுக்கு நீண்டகால ஒப்புதல் மற்றும் இத்தாலியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்கள் உள்ளிட்ட விஷயங்களை இந்திய தரப்பு எழுப்பியது.

பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்திய-இத்தாலி கூட்டு ஆணையத்தின் அரசுகளுக்கிடையேயான கூட்டத்தை தொடர்ந்து, எரிசக்தி கூட்டின் மீது கவனம் செலுத்தும் அரசு மற்றும் தொழில்களுக்கிடையேயான கூட்டம் அமைச்சர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தியாவில் இருந்து 3 நிறுவனங்களும் (இந்தியன் ஆயில், அதானி சோலார், ரீநியூ பவர்), இத்தாலியில் இருந்து 3 நிறுவனங்களும் (எனெல் கிரீன் பவர், ஸ்னாம், டெக்னிமான்ட்) இதில் பங்கேற்று பசுமை பொருளாதாரம், தூய்மை தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை குறித்து விளக்கங்களை வழங்கின.

எரிசக்தி மாற்றத்தை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் பருவநிலை கூட்டு குறித்து 2020 நவம்பர் 6 அன்று இந்தியா மற்றும் இத்தாலியின் பிரதமர்கள் நிறைவேற்றிய செயல்திட்டத்தின் கீழ் வகுத்துள்ள லட்சியம் குறித்து இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். தூய்மை எரிசக்தி துறையில் இந்தியா மற்றும் இத்தாலி ஆற்றி வரும் பங்கு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734404

 

-----



(Release ID: 1734445) Visitor Counter : 298