ரெயில்வே அமைச்சகம்

புதிய நடவடிக்கையின் மூலம் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்துக்கு மிகப்பெரிய ஊக்கம்

Posted On: 09 JUL 2021 5:17PM by PIB Chennai

நேபாளத்திற்கு ரயில் மூலம் சரக்குகளை ஏற்றிச் செல்ல இந்திய ரயில்வே வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனைத்து ரயில் சரக்கு செயல்பாட்டாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்திற்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைத்துள்ளது. 

இதன் மூலம், இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான இருதரப்பு சரக்கு அல்லது இந்திய துறைமுகங்களின் மூலம் நேபாளத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வேறு ஒரு நாட்டின் சரக்கு ஆகிய அனைத்தையும் இந்திய ரயில்வே வசதிகளின் மூலம் எடுத்துச் செல்லலாம்.

இந்த தாராளமயமாக்கல் நடவடிக்கையின் காரணமாக சந்தை சக்திகள் நேபாளத்தின் சரக்கு ரயில் போக்குவரத்தில் பங்கேற்பதோடு, செயல்திறன் அதிகரித்து, செலவுகள் குறைந்து நேபாள நுகர்வோருக்கு நன்மைகள் விளையும். இந்திய மற்றும் நேபாள அதிகாரிகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட

கடிதங்களின் நகல்கள் பரிமாற்றத்திற்கு பின்னர் 2021 ஜூலை 9-ல் இருந்து இது செயல்பாட்டுக்கு வரும்.

இதன் பிறகு, இந்தியாவுக்குள் ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் அனைத்து சரக்குகளையும் நேபாளத்திற்கும் எடுத்துச் செல்லலாம். அதே போன்று, நேபாளத்தில் இருந்து சரக்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வரலாம்.

இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையின் அடிப்படையில் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், பிராந்திய தொடர்புகளை மேம்படுத்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சியில், இந்திய தரப்புக்கு ரயில்வே அமைச்சகத்தின் உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சி) திரு சஞ்சய்குமார் மொஹந்தியும், நேபாள தரப்பிற்கு வர்த்தகம், தொழில் மற்றும் விநியோகங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு தினேஷ் பட்டாராயும் தலைமை வகித்தனர்.

ரயில்வே அமைச்சகம், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், வடக்கு பிரிவு, வெளியுறவு அமைச்சகம், நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கடிதத்தில் நேபாள அரசு 2021 ஜூன் 28 அன்றும், இந்திய ரயில்வே அமைச்சகம் 2021 ஜூன் 29 அன்றும் கையெழுத்திட்டன. கடிதங்களின் நகல்கள் பரிமாற்றத்திற்கு பின்னர் 2021 ஜூலை 9-ல் இருந்து இது செயல்பாட்டுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1734254

*****************


(Release ID: 1734288) Visitor Counter : 311