இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

வேளாண் தொழில்நுட்பத்தை விவசாயிகள் எளிதில் அணுகும் வகையில் வட்டார மொழியில் அமர்வுகள்

Posted On: 07 JUL 2021 4:18PM by PIB Chennai

வேளாண்மை குறித்த தொடர் கூட்டங்களின் 28-வது பதிப்பில் பஞ்சாப்பைச் சேர்ந்த திரு பால்ராஜ் என்ற விவசாயி விருந்தினராகக் கலந்துக்கொண்டு, தங்களது பாசன நடைமுறையில், காற்றில் உள்ள ஈரப்பதத்தை கண்டறியும் உணரி பொருத்தப்பட்டிருப்பதன் தாக்கங்கள் பற்றி பேசினார்.

அவரது கிராமத்தில் மின்சார வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் டீசலில் இயங்கும் பம்புகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த உணரியைப் பயன்படுத்துவதன் மூலம் டீசலும் தண்ணீரும் பெருமளவு சேமிக்கப்பட்டுள்ளது. மண்ணின் அடிப்பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தையும் இந்த உணரியால் கண்டறிய முடிந்தது. இதன் மூலம் பயிரின் விளைச்சல் மற்றும் மண்ணின் வளம் வளர்ச்சி அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த உணரி, வேளாண் தொழில்நுட்ப புதுமை நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்ற 28-வது பதிப்புக் கூட்டத்தில் பேசிய வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் துணை தலைமை இயக்குநர் (வேளாண்மை தொடர்பகம்) டாக்டர் கே சிங், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்திசெய்ய, விவசாயிகளுக்கு உதவுவதற்கான தேசிய டிஜிட்டல் தளமான கிசான் மித்ர் உதவிகரமாக இருப்பதாகக் கூறினார்.

நாடுமுழுவதும் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்களில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் சிறப்பாக பணியாற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், சமூக மாற்றத்திற்கான இந்திய மையம், தொழில்முனைவு கற்றலுக்கான என்.எஸ். ராகவன் மையம் ஆகியவற்றை அவர் பாராட்டினார். இதுபோன்ற இணையவழி கருத்தரங்கங்களை வட்டார மொழிகளில் நடத்தும் முயற்சியைப் பாராட்டிய அவர், வரும் காலங்களில் மேலும் பல விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்தும், அதற்குத் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகள் பற்றியும் எடுத்துரைப்பார்கள் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

28வது பதிப்பு கூட்டத்தைக் காண:

https://www.youtube.com/watch?v=8SyC2G2DRT0

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733374

-----(Release ID: 1733403) Visitor Counter : 228