வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

அனைத்து 8 வடகிழக்கு மாநிலங்களிலும் கொவிட் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

Posted On: 03 JUL 2021 4:47PM by PIB Chennai

மேகாலயா தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் கொவிட் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் கொவிட் நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய அவர், தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் குறைந்து வருவதில் தேசிய சராசரியை இம்மாநிலங்கள் எட்டிப் பிடித்ததற்காக திருப்தி தெரிவித்தார். ரி-போய் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தொற்று பரவியதன் காரணமாக மேகாலயா மட்டும் விதிவிலக்காக உள்ளது என்று அவர் கூறினார்.

வடகிழக்கு பகுதியில் 2021 ஜூன் 30 அன்று 3.96 சதவீதமாக இருந்த தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம், 2021 ஜூலை 2 அன்று 2.94 சதவீதமாக குறைந்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

2021 ஜூன் 30 அன்று 2.34 சதவீதமாக இருந்த தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம், 2021 ஜூலை 2 அன்று 2.09 சதவீதமாக குறைந்துள்ளதோடு இது ஒத்துள்ளது.

அசாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மிசோராம் மற்றும் நாகாலந்து ஆகிய 8 வடகிழக்கு மாநிலங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், வடகிழக்கு அமைச்சகத்தின் செயலாளர், வடகிழக்கு சபையின் செயலாளர் மற்றும் இதர அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொவிட் நிலவரம், பெருந்தொற்றை எதிர்த்து போரிடுவதற்கான சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து 8 வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் தினமும் தாம் தகவல்களை பெற்று வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732509

-----



(Release ID: 1732526) Visitor Counter : 167