மத்திய அமைச்சரவை

பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம், 16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை, கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் மீதமுள்ள மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேசங்களுக்கும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிக்கவும் ஒப்புதல்

Posted On: 30 JUN 2021 4:12PM by PIB Chennai

நாட்டில் உள்ள 16 மாநிலங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின்(PPP) மூலம் பாரத் நெட் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தியை அமல்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

அதன்படி தற்போது, 16 மாநிலங்களில் கிராம பஞ்சாயத்தை தாண்டி, மக்கள் குடியிருக்கும் அனைத்து கிராமங்களிலும்,  பாரத் நெட் திட்டம் நீட்டிக்கப்படும்.    இந்த மாற்றியமைக்கப்பட்ட உத்தியில், சர்வதேச போட்டி ஏல முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தால், ஏற்படுத்தப்படும்   பாரத் நெட்-ன் உருவாக்கம், மேம்பாடு, செயல்பாடு, பராமரிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவை உள்ளடங்கியுள்ளன.  பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்துக்கு மதிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச மானிய உதவி ரூ.19,041 கோடி. 

கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் உட்பட 3.61 லட்சம் கிராமங்களில் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள, மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை கொள்கை அடிப்படையிலான ஒப்புதலை வழங்கியது. இந்த (மீதமுள்ள) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான வழிமுறைகளை, தொலைத் தொடர்புத் துறை தனித்தனியாக உருவாக்கும்.
 
இந்த பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பு (PPP), பாரத்நெட் திட்டத்தின் செயல்பாடு, பராமரிப்பு, பயன்பாடு மற்றும் வருவாய் உற்பத்தி ஆகியவற்றில் தனியார் துறை திறனை அதிகரிக்கும் மற்றும் பாரத் நெட் திட்டத்தை விரைவாக கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்ந்தெடுக்கப்படும் தனியார் நிறுவனம், நம்பகமான, அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை, சேவை ஒப்பந்தப்படி (SLA) வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பகமான, தரமான, அதிவேக பிராட்பேண்ட் வசதிகளுடன் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிப்பதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் இ-சேவைகளை சிறப்பாக பெற முடியும்.  இது ஆன்லைன் கல்வி, தொலைதூர மருத்துவம், திறன் மேம்பாடு, மின்னணு வர்த்தகம் மற்றும் இதர பிராட்பேண்ட் பயன்பாடுகளையும் செயல்படுத்த உதவும்.  பிராட்பேண்ட் இணைப்புகளை தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வழங்குவது, , கண்ணாடியிழை கேபிள்கள் விற்பனை,  செல்போன் கோபுரங்களை கண்ணாடியிழை கேபிள் மூலம் இணைப்பது, மின்னணு வர்த்தகம் போன்ற பல வழிகளில் இருந்து வருமானம் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஊரக பகுதிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை பரவச் செய்வது, டிஜிட்டல் வசதிகளை பெறுவதில் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் இடையேயான வேறுப்பாட்டை போக்கும் மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் சாதனைகளை அதிகரிக்கும்.  

பிராட்பேண்டின் ஊடுருவல் மற்றும் பரவல், நேரடி மற்றும் மறைமுக வேலைவாயப்பையும் மற்றும் வருவாயையும் அதிகரிக்கும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பு திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள மாநிலங்களில், சட்ட உரிமையை பெறுவதை எளிதாக்கும். 

பாரத்நெட் பிபிபி திட்டம், கீழ்கண்ட நுகர்வோருக்கு சாதகமான நன்மைகளை கொண்டு வரும்: 
(a)    நுகர்வோருக்கான தனியார் துறை வழங்கும் புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்;
(b)    நுகர்வோருக்கு உயர் தர சேவை;
(c)    விரைவான நெட்வொர்க் பயன்பாடு மற்றும் நுகர்வோருக்கு விரைவான இணைப்பு:
(d)    சேவைகளுக்கு போட்டி கட்டணங்கள்;
(e)    நுகர்வோருக்கு வழங்கும் தொகுப்புகளில், OTT சேவைகள் உட்பட அதிவேக பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் மல்டி மீடியா சேவைகள்
(f)    அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கான அணுகல்
 
தொலைத் தொடர்பு துறையின் இந்த முக்கியமான உள்கட்டமைப்பில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பு திட்டம் ஒரு புதுமையான முயற்ச்சி. தனியார் துறை கூட்டு நிறுவனம்  ஒரு பங்கு முதலீட்டைக் கொண்டு வந்து மூலதனச் செலவினம் மற்றும் நெட்வொர்க்கின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக வளங்களை திரட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், பாரத்நெட்டுக்கான பிபிபி மாடல், செயல்திறன், சேவையின் தரம், நுகர்வோர் அனுபவம் மற்றும் தனியார் துறை நிபுணத்துவம், தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் சாதனைகளை விரைவுபடுத்துவதற்கான திறன்களை அதிகரிக்கும். இது மக்கள் பணத்தின் கணிசமான சேமிப்புக்கு கூடுதலாக இருக்கும். 
 



(Release ID: 1731613) Visitor Counter : 377