வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மகாராஷ்டிராவில் இருந்து துபாய்க்கு கமலம் பழம் ஏற்றுமதி

Posted On: 26 JUN 2021 5:05PM by PIB Chennai

பழங்களின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் வகையில், நார் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த டிராகன் புரூட் என்றழைக்கப்படும் கமலம் பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் உள்ள தடாசார் கிராமத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கமலம் பழங்கள் அபேடாவின் அங்கீகாரம் பெற்ற ஏற்றுமதியாளரான கே பி நிறுவனத்தால் பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்பட்டது.

ஹைலோசெரேசுண்டாடஸ் என்று அறிவியல் பூர்வமாக அழைக்கப்படும் இந்த பழமானது மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் விளைவிக்கப்படுகிறது.

1990-களில் இந்தியாவில் நுழைந்த டிராகன் புரூட் வளர்ப்பு, பெரும்பாலும் வீட்டுத் தோட்டங்களில் செய்யப்பட்டது. சமீப காலமாக பிரபலம் அடைந்துள்ள இந்த பழத்தை பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்போது விளைவித்து வருகிறார்கள்.

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தற்சமயம் இந்த பழம் விளைகிறது. இதற்கு குறைவான தண்ணீர் போதுமானது. பல்வேறு வகையான மண் அமைப்புகளில் இது வளரும். மூன்று வகையான வண்ணங்களில் இந்த பழம் விளைகிறது.

2020 ஜூலை மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் டிராகன் புரூட் உற்பத்தி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டது நினைவிருக்கலாம். இதன் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு எட்டும் வகையில் பணியாற்றிவரும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி விவசாயிகளை அவர் பாராட்டினார்.

நார்ச்சத்து வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ள இந்த பழம் செல் பாதிப்பை குணப்படுத்தி ஜீரண அமைப்பை மேம்படுத்துகிறது.

உள்கட்டமைப்பு வளர்ச்சி, தர மேம்பாடு மற்றும் சந்தை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு அபேடா வழங்கி, ஏற்றுமதிகளை ஊக்குவித்து வருகிறது. மேலும், ஏற்றுமதிக்கான வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம், சந்தை அணுகல் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களின் மூலம் வர்த்தக துறையும் ஏற்றுமதிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730536

 

-----


(Release ID: 1730560) Visitor Counter : 353