சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பசுமைவழிச் சாலைகள் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் திரு நிதின் கட்காரி ஆய்வு
Posted On:
22 JUN 2021 5:36PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நிதின் ஜே. கட்காரி, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் முக்கிய திட்டமான பாரத்மாலா பரியோஜனா முதல் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 5 பசுமைவழிச் சாலைகள் மற்றும் 17 கட்டுப்படுத்தப்பட்ட பசுமைவழி தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். 8000 கிலோ மீட்டர் தொலைவில் இந்த 22 பசுமைவழிச் சாலைகள் திட்டம் ரூ. 3.26 லட்சம் கோடி மதிப்பில் உருவாக்கப்படவுள்ளது. நாட்டிலுள்ள உற்பத்தி மையங்களுடன் தொழில்துறை, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவப் பொருட்களின் பயன்பாட்டிற்கு இடையேயான போக்குவரத்தை சீரமைப்பதற்கு இவை முக்கிய திட்டங்களாக இருக்கும். மேலும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தையும் இந்தத் திட்டங்கள் துரிதப்படுத்தும்.
நிலம் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் அனுமதி/ வனத்துறை அனுமதி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு முந்தைய நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்த விரிவான அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையக அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். மாநில அரசுகள் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் விரைவாக சரி செய்யப்பட வேண்டும் என்றும், தேவை ஏற்பட்டால் குறிப்பிட்ட மாநிலங்களுடனான விஷயம் தமது அளவில் தீர்த்து வைக்கப்படும் என்றும் திரு கட்காரி உறுதி அளித்தார். திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவற்றை உரிய காலத்தில் பணமாக்குவது, நெடுஞ்சாலைகளில் சாலை பயனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அவற்றின் மதிப்பை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர் வலியுறுத்தினார். உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளின் தரத்தில் குறைவில்லாதவாறு உரிய காலத்தில் அவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) பேசுகையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை உரிய நேரத்தில் அடைவதற்கு ஏதுவாக திட்டப்பணிகள் அவ்வபோது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலாளர் திரு கிரிதர் அரமானே, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையகத்தின் தலைவர் டாக்டர் எஸ் எஸ் சந்து, தலைமை இயக்குநர் (சாலைகள்) திரு ஐ கே பாண்டே மற்றும் இதர உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729440
*****************
(Release ID: 1729490)
Visitor Counter : 266