சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

நாட்டின் பல பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக 5 விளையாட்டு மையங்கள் : மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அறிவிப்பு

Posted On: 20 JUN 2021 5:05PM by PIB Chennai

நாட்டின் பல பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக 5 விளையாட்டு மையங்கள் அமைக்க மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறியுள்ளார்.

மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் (ADIP), குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இன்று நடைப்பெற்றது.

இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகள் இடையே விளையாட்டின் மீது உள்ள ஆர்வம் மற்றும் பாராஒலிம்பிக்  போட்டியில் அவர்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றை பார்த்து, நாட்டின் பல பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக 5 விளையாட்டு மையங்களை அமைக்க மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இவற்றில் ஒன்று அகமதாபாத் நகரில் திறக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2808 மாற்றுத் திறனாளிகள் பயன்பெற குஜராத்துக்கு மத்திய அரசு ரூ.8.06 கோடி வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை அளிக்கும், சுகம்யா பாரத் திட்டத்தின் கீழ் 709 ரயில் நிலையங்கள், 10,175 பேருந்து நிலையங்கள், 683 இணையதளங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம் செஹோரில்  தேசிய மனநல மறுவாழ்வு மைய பணிகளை மத்திய பொதுப் பணித்துறை தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி, ‘‘ மாற்றுத் திறனாளிகளை கண்டு கொள்ளாத சமூகமும், முடங்கிய சமூகம்தான். மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இது மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக பாதுகாப்பு மட்டும் அல்லாமல், அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு, சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளையும் மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728787

 

----



(Release ID: 1728875) Visitor Counter : 190