அணுசக்தி அமைச்சகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக வாய்வழி புற்றுநோய்க்கான செலவு குறித்த ஆய்வு முடிவு வெளியீடு

Posted On: 20 JUN 2021 11:33AM by PIB Chennai

உலகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாக இருப்பதாகவும், சுமார் 70% புற்றுநோய் பாதிப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் ஏற்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்களிடையே வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது.

இதுபற்றி டாட்டா நினைவக மையத்தின் இயக்குநர் டாக்டர் ஆர் பாத்வே கூறுகையில், “க்ளோபோகேன் புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களில் மட்டும் நோயினால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 68% அதிகரித்து, அவசரகால மருத்துவ நிலையாக உருவாகியுள்ளது.

மேலும் மருத்துவ சேவைகளின் அணுகல் குறைந்து, நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், முற்றிய நிலையிலேயே சிகிச்சை பெற நோயாளிகள் வருவதால் முறையான சிகிச்சை அளிப்பது கடினமாக உள்ளது”, என்று கூறினார். சுமார் 10% பேருக்கு நோய் தீவிரமடைவதால் அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க இயலவில்லை.

சிகிச்சை அளிக்கப்படும் ஒரு சிலரும் தங்களது வேலையை இழந்து, தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொருளாதார ரீதியான சுமையாக மாறுகிறார்கள். மருத்துவ காப்பீட்டால் நோயின் சிகிசைக்குத் தேவையான முழு தொகையையும் வழங்க இயலாது என்பதால் இந்த  வசதியைப் பெற்றவர்களாலும் முழுவதும் பயனடைய முடியவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு டாட்டா நினைவக மையத்தைச் சேர்ந்த டாக்டர் பங்கஜ் சதுர்வேதி தலைமையிலான குழுவினர், புற்றுநோயைக் குணப்படுத்துவதற்குத் தேவையான கட்டணம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். பல தரப்பு சேவைகள் தொடர்பான தரவுகளை சேகரித்து, அதன் அடிப்படையில் மதிப்பீடுகளை ஆராய்ந்துள்ள இந்தியாவின் முதல் ஆய்வாக இது அமைந்துள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிரம்மாண்ட தரவுகள், வாய் புற்றுநோய் சிகிச்சைக்காகத் தேவைப்படும் நேரடி மருத்துவ கட்டணங்களைத் தீர்மானித்துள்ளது.

டாட்டா நினைவக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளரும் இந்த ஆய்வின் முன்னணி ஆசிரியருமான டாக்டர் அர்ஜுன் சிங், நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம் (ரூ. 2,02,892), முதல் கட்ட சிகிச்சைக்குத் தேவைப்படும் கட்டணத்தைவிட (ரூ. 1,17,135) 42% அதிகமானது என்று தெரிவித்தார். அதேவேளையில் சமூகப் பொருளாதார நிலை உயரும்போது ஒருவருக்கான கட்டணத்தில் சராசரியாக 11% குறைகிறது. சிடி, எம்ஆர்ஐ, பெட் முதலிய கதிரியக்கவியல் சார்ந்த சேவைகளுக்கு அதிகக் கட்டணம் என்ற வீதத்தில், மருத்துவ உபகரணங்களுக்கு 97.8% கட்டணம் பெறப்படுகிறது. தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிகிச்சை கட்டணம், முதல் நிலை நோயாளிகளிடம் பெறப்படும் தொகையை விட 1.4 மடங்கு அதிகமாகும். அறுவை சிகிச்சையுடன் கீமோ மற்றும் கதிரியக்க சிகிச்சையுடன் சேர்த்து சராசரியாக 44.6 சதவீதத் தொகை அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728720

 

----



(Release ID: 1728762) Visitor Counter : 248


Read this release in: English , Urdu , Hindi