ஜல்சக்தி அமைச்சகம்
தண்ணீர் சேமிப்பு பற்றிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற ஜல் சக்தி அமைச்சகம் தீவிரம்: அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா
Posted On:
19 JUN 2021 12:39PM by PIB Chennai
ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தண்ணீர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 27-ஆவது தண்ணீர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா உரையாற்றினார். தண்ணீர் சம்பந்தமான விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவது தொடர்பாக பங்குதாரர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்திலும் இந்தக் காணொலி நிகழ்ச்சிக்கு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
தண்ணீர் துறையில் பெண்களின் பங்களிப்பை 27-ஆவது பதிப்பு வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தேசிய தண்ணீர் இயக்கம், இந்தத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 41 பெண் போராளிகளைத் தேர்வு செய்தது. இவர்களில் 6 பேர் தங்களது வெற்றிப் பயணம் குறித்து பகிர்ந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தண்ணீர் துறையில் தனித்து இயங்கி வந்த துறைகள் மற்றும் அமைச்சகங்களை இணைத்து ஜல் சக்தி அமைச்சகமாக உருவாக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார். தண்ணீர் துறை சந்தித்து வந்த பொதுவான பிரச்சினைகளுக்கு இதன் மூலம் ஒருங்கிணைந்த அணுகுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்காக தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவது தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமிப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜல் சக்தி அமைச்சகம் பிரம்மாண்ட பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அனைவருக்கும் பொதுவானதாக தண்ணீரை மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் வெகுஜன மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகூர் கிராமத்தைச் சேர்ந்த திருமிகு வசந்தா உள்ளிட்ட 6 பெண் தண்ணீர் போராளிகள் நிகழ்ச்சியின்போது கவுரவிக்கப்பட்டனர்.
தண்ணீர் துறையில், அடிமட்ட அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் 41 பெண் போராளிகளுக்கு அமைச்சர் திரு கட்டாரியா பாராட்டு தெரிவித்தார். ஜல் சக்தி திட்டத்தின் ‘சக்தி’ என்று இவர்களைக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களைப் போல அனைவரும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மழைநீரை சேமியுங்கள் என்ற திட்டத்தை பிரபலப்படுத்தி, மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு மாநில அதிகாரிகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தேசிய தண்ணீர் இயக்கத்தின் மேலாண் இயக்குனர் திரு அசோக் குமாரையும் அமைச்சர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728492
*****************
(Release ID: 1728567)
Visitor Counter : 221