பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

சர்வதேச அரிவாள் செல் தினத்தை முன்னிட்டு இரண்டாவது தேசிய அரிவாள் செல் மாநாட்டை திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைக்கிறார்

Posted On: 18 JUN 2021 7:15PM by PIB Chennai

அரிவாள் செல் நோய் குறித்த இரண்டாவது தேசிய அரிவாள் செல் மாநாட்டை பழங்குடியினர் நல அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா காணொலி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 19 அன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச அரிவாள் செல் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பழங்குடியினர் நல இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் சருதா இந்நோய் குறித்த சிறப்புரையை ஆற்றுவார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு, நோவார்டிஸ், அப்போலோ மருத்துவமனை, பிரமல் பவுண்டேஷன், காஸ்க்டோ மற்றும் நாஸ்கோ ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அமைச்சகத்தின் யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களில் நிகழ்ச்சி நேரலை செய்யப்படும்.

பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வரும் ரத்தம் தொடர்பு குறைபாடான அரிவாள் செல் நோய், இந்தியாவில் உள்ள பல்வேறு பழங்குடி இன குழுக்களிடம் காணப்படுகிறது. இதன் மூலம் மாநிலங்களின் சுகாதார அமைப்புகள் மீது சுமை ஏற்படுகிறது.

செலவு குறைந்த பல சிகிச்சை முறைகள் மூலம் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைந்திருந்தாலும், இந்த நோய்க்கான சிகிச்சை பழங்குடியினர் வாழும் பகுதிகளில் குறைந்த அளவிலேயே வழங்கப்படுகிறது. ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு ஒடிசா, கிழக்கு குஜராத், தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் உள்ள சில இடங்கள் மற்றும் கேரளாவில் இந்த நோய் பெரும்பாலும் காணப்படுகிறது.

அரிவாள் செல் நோய்க்கான சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றங்கள், எதிர்கால மாற்றங்கள், பாதிக்கப்படக்கூடிய மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

ஒத்தக் கருத்துடைய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஒன்று திரட்டும் இந்த நிகழ்வில் அரிவாள் செல் நோய் பராமரிப்பிற்கான எதிர்காலம் மற்றும் அதனால் அவதியுறும்  நோயாளிகளின் சிரமங்களை குறைத்தல் குறித்து ஆலோசிக்கப்படும். தொடர் பராமரிப்பின் மூலம் அரிவாள் செல் நோயை சிறப்பான முறையில் நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை ஒழுங்கு படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1728302

*****************



(Release ID: 1728338) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi , Punjabi