ஜல்சக்தி அமைச்சகம்
வடமேற்கு இந்தியாவின் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் 2022-ஆம் ஆண்டிற்குள் குடிநீர் குழாய் இணைப்புகள்
Posted On:
05 JUN 2021 5:16PM by PIB Chennai
பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய ஐந்து வடமேற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டு 2024- ஆம் ஆண்டிற்கு பதிலாக 2022-ஆம் ஆண்டே இந்தப் பகுதிகளில் அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து ரூ. 8,216.25 கோடியை வழங்க மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஒப்புதல் அளித்துள்ளார். இது கடந்த 2020-21 ஆம் ஆண்டு இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதன் மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 5 கோடி மக்களின் வாழ்க்கை மேம்படும். அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் விரைவான செயல்பாடுகளினால் தேசிய இலக்கான 2024-ஆம் ஆண்டிற்கு முன்பாக, 2022-ஆம் ஆண்டிலேயே இந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்படும்.
நம் நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கடந்த 21 மாதங்களில் இந்த ஐந்து வடமேற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 29.98 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் அறிவிப்பு வெளியானபோது இந்தப் பகுதிகளில் வெறும் 47.84 லட்சம் ஊரக வீடுகளுக்கு மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724713
*****************
(Release ID: 1724763)