சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ரெபோ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 2021-22-இல் பொருளாதார வளர்ச்சி 9.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: ரிசர்வ் வங்கி
Posted On:
04 JUN 2021 12:43PM by PIB Chennai
ரெபோ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதம் எனும் அளவில் இருக்கும் என்று அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ், வங்கி வட்டி விகிதம் 4.25 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார்.
ரிவர்ஸ் ரெபோ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் எனும் அளவில் இருக்கும். வளர்ச்சி மற்றும் மீட்சிக்கு வலுவூட்ட அனைத்து முனைகளில் இருந்தும் ஆதரவு அவசியம் என்று நிதி கொள்கை குழு கருதியதாக அவர் கூறினார்.
“இதன் காரணமாக வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை,” என்று ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிக்கையை காணொலி மூலம் வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
2021-22-இல் பொருளாதார வளர்ச்சி 9.5% ஆக இருக்கும்:
2021-22-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 9.5% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்ப்பதாக ஆளுநர் கூறினார். கொவிட் முதல் அலையுடன் ஒப்பிடும் போது, இரண்டாம் அலையின் போது பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நகர்ப்புற தேவை குறைந்திருந்தாலும், தடுப்பு மருந்து வழங்கல் வரும் மாதங்களில் தீவிரமடைந்து பொருளாதார நடவடிக்கைகள் வழக்கமான அளவுக்கு வர உதவும். சர்வதேச வணிகத்தின் மீட்சியும் இந்திய ஏற்றுமதி துறைக்கு உதவும். பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புற தேவை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 2021-22-ல் 5.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.
வளர்ச்சி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டும் எனவும் கூறிய ஆளுநர், “உலகின் தடுப்புமருந்து தலைநகரமாக இந்தியா இருப்பதும், மருந்து பொருட்களின் உற்பத்தியில் அதன் தலைமைத்துவமும் கொவிட்-19 நிலைமையை மாற்றியமைக்க வல்லவை,” என்றார்.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் அறிக்கையையும், நிதி கொள்கை அறிக்கையையும் இந்த ஆங்கில செய்திக் குறிப்பில் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724336.
-----
(Release ID: 1724510)
Visitor Counter : 204