உள்துறை அமைச்சகம்
குஜராத்தில் 9 ஆக்சிஜன் ஆலைகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் திறந்து வைத்தார்
Posted On:
03 JUN 2021 6:58PM by PIB Chennai
குஜராத்தில் வல்லப் இளைஞர் அமைப்பு நிறுவியுள்ள ஒன்பது ஆக்சிஜன் ஆலைகளை காணொலி மூலம் திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வல்லப் இளைஞர் அமைப்பு மேற்கொண்டு வரும் மனிதநேய பணிகளை பாராட்டினார்.
வல்லப் இளைஞர் அமைப்பின் தலைவர், ஜகத்குரு ஸ்ரீ விராஜ்ராஜ்குமார் மகராஜ்ஜி, குஜராத் முதல்வர் திரு விஜய் ருபானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இரண்டாம் அலையின் போது தனது தோற்றத்தை மாற்றிக்கொண்ட கொரோனா வைரஸ், மக்களின் உடல்நலனை வெகுவாக பாதித்ததாக திரு அமித் ஷா கூறினார். மிகவும் குறுகிய காலத்தில் அதை கட்டுப்படுத்தி நாமனைவரும் சாதித்துள்ளோம் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், வளர்ந்த நாடுகளில் கூட சுகாதார அமைப்புகள் நொறுங்கிய வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமை மிகுந்த தலைமையின் கீழ் கொவிட்டுக்கு எதிரான போரை நாம் நடத்தினோம் என்றார்.
கொவிட் இரண்டாம் அலையில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கலை தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு மனவலிமையை வழங்குமாறு இறைவனை தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
இந்த பேரிடரின் போது நோயாளிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார்.
“அவர்களது முயற்சிகளின் காரணமாகத் தான் கொவிட்டுக்கு எதிரான போர் இந்தக் கட்டத்தை எட்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.
பெருந்தொற்று குறைந்து வருவதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த திரு அமித் ஷா, ஆக்சிஜனுக்கான தேவையும் 10,000 மெட்ரிக் டன்னில் இருந்து 3,500 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளதாக கூறினார்.
தடுப்பு மருந்து வழங்கல் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மிகவும் குறுகிய காலத்தில் 21 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று திரு ஷா கூறினார். உலகிலேயே மிகவும் வேகமாக தடுப்பு மருந்து வழங்கி வரும் நாடு இந்தியா என்றும், இது மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாடு விரைவில் தடுப்பு மருந்து பாதுகாப்பு கவசத்தை பெற வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் எண்ணம் என்று அவர் கூறினார். இந்த இலக்கை இந்தியா நிச்சயம் அடையும் என்றும் திரு ஷா கூறினார்.
*****************
(Release ID: 1724196)
Visitor Counter : 251