அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுரங்கங்கள் மற்றும் அதிக உயரங்களில் உயிர்களை காப்பாற்றக்கூடிய நானோராட் அடிப்படையிலான ஆக்சிஜன் சென்சாரை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

Posted On: 03 JUN 2021 5:41PM by PIB Chennai

புற ஊதா கதிர்களின் உதவியோடு அறை வெப்பநிலையில் செயல்பட்டு சுரங்கங்கள், அதிக உயரமான இடங்கள், விமானங்களின் உட்புறங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் நானோராட் அடிப்படையிலான ஆக்சிஜன் சென்சாரை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆக்சிஜன் அளவை விரைந்து கண்டறிவதன் மூலம் சுரங்கங்கள் மற்றும் அதிக உயரமான இடங்களில் உயிர்களை காப்பாற்ற முடிவதோடு, ஆராய்ச்சி மையங்களில் செய்யப்படும் ஆய்வுகளின் துல்லியத் தன்மையையும் மேம்படுத்தலாம்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஆய்வு நிறுவனமான சென்டர் ஃபார் நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் சயின்ஸின் விஞ்ஞானியான டாக்டர் எஸ் அங்கப்பனின் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ஆக்சிஜன் சென்சாரை உருவாக்கியுள்ளனர்.

டாக்டர் எஸ் அங்கப்பனின் தலைமையில் ஹிரன் ஜோதிலால், கௌரவ் சுக்லா, சுனில் வலிய மற்றும் பரத் எஸ் பி ஆகியோர் இணைந்து டைட்டானியம் ஆக்சைடை இதில் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வு மெட்டீரியல்ஸ் ரிசர்ச் புல்லெட்டின் என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

*****************


(Release ID: 1724167) Visitor Counter : 225


Read this release in: English , Urdu , Hindi , Bengali