பிரதமர் அலுவலகம்
யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
46 குழுக்களை முன்கூட்டியே பணியில் அமர்த்தியது தேசிய பேரிடர் மீட்புப் படை, 13 குழுக்கள் விமானம் மூலம் இன்று அனுப்பிவைப்பு
நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடலோர காவல்படையும், கடற்படையும், கப்பல்களையும் ஹெலிகாப்டர்களையும் ஈடுபடுத்தியுள்ளன
கரையோர நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சரியான நேரத்தில் வெளியேற்றுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் தடை செய்வதன் நேரத்தை குறைக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
கடலோர சமூகங்கள், தொழில்துறை போன்ற பல்வேறு பங்குதாரர்களை நேரடியாக சந்தித்து, உணர்த்துவதன் மூலம் அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்: பிரதமர்
Posted On:
23 MAY 2021 1:29PM by PIB Chennai
யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/ சம்பந்தப்பட்ட முகமைகளின் தயார்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
யாஸ் புயல், மே 26-ஆம் தேதி மாலை மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா இடையே மணிக்கு 155-165 கிலோமீட்டர் முதல் மணிக்கு 185 கிலோமீட்டர் வரையிலான காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் இந்த புயலினால் கனமழை பெய்யக்கூடும். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் 2-4 மீட்டர் உயரத்திற்கு இருக்கலாம் என்றும் இந்த மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சமீபத்திய முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்து வழங்கிவருகிறது.
அனைத்து கடலோர மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள்/ சம்பந்தப்பட்ட முகமைகளுடன் மே 22-ஆம் தேதி மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது பற்றி பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் நிலைமையை 24 மணி நேரமும் ஆய்வு செய்து வருவதுடன், மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய முகமைகளுடன் தொடர்பில் உள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணையை முன்கூட்டியே அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே விடுவித்துள்ளது. படகுகள், மரங்களை வெட்டும் கருவிகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் போன்ற வசதிகளுடன் 46 குழுக்களை 5 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை அமர்த்தியுள்ளது.
கூடுதலாக 13 குழுக்கள் விமானம் வாயிலாக இன்று அனுப்பப்படுவதுடன், மேலும் 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய கடலோர காவல் படையும், கடற்படையும், கப்பல்களையும், ஹெலிகாப்டர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன. விமானப் படையும் ராணுவத்தின் பொறியாளர் பணிக்குழுவும், படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு பிரிவினருடன் 7 கப்பல்கள் மேற்கு கடற்கரையோரத்தில் தயார் நிலையில் இருக்கின்றன.
கடலில் நிறுவப்பட்டுள்ள அனைத்து எண்ணெய் அமைப்புகளின் பாதுகாப்பிற்காக, அவற்றின் கப்பல்களை பாதுகாப்பான துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. எரிசக்தி அமைச்சகம், அவசரகால பயன்பாட்டிற்கான கருவிகளை இயக்கியிருப்பதுடன், மின்சாரத்தை உடனடியாக வழங்குவதற்கு ஏதுவாக மின்மாற்றிகள், டீசல் ஜெனரேட்டர்கள், உபகரணங்கள் முதலியவற்றை தயார் நிலையில் வைத்துள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சகம், அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் இணைப்பகங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தொலைத்தொடர்பு இணைப்புகளை மீண்டும் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
புயலினால் பாதிப்படையக் கூடிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொவிட் தொற்றுக்கு எதிரான முயற்சிகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. அனைத்து சரக்கு கப்பல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் மேற்கொண்டு வருவதுடன் அவசரகால கப்பல்களையும் பணியில் அமர்த்தியுள்ளது.
பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில முகமைகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை உதவிகளை அளித்து வருவதுடன், புயலை எதிர்கொள்வது பற்றிய சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் திரு. மோடி உத்தரவிட்டார். கரையோர நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சரியான நேரத்தில் வெளியேற்றுவதை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.
மின்சாரம், தொலைபேசி இணைப்புகளைத் தடை செய்வதன் நேரத்தைக் குறைப்பது, விரைவாக அவற்றின் சேவையை மீண்டும் வழங்குவதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார். மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சையும் தடுப்பூசிகள் வழங்கும் பணிகளும் இடையறாது நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, முறையாக திட்டமிடுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். சிறந்த நடைமுறைகள் மற்றும் சீரான ஒருங்கிணைப்பிலிருந்து கற்றுக்கொள்வதற்காக திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார். புயலின்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் பற்றி உள்ளூர் மொழிகளில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலான ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகளை பாதிக்கப்படும் மாவட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
கடலோர சமூகங்கள், தொழில்துறை போன்ற பல்வேறு பங்குதாரர்களை நேரடியாக சந்தித்து, உணர்த்துவதன் மூலம் அவர்களையும் இணைத்துக் கொள்வதன் அவசியம் பற்றியும் பிரதமர் பேசினார்.
உள்துறை அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், உள்துறை இணை அமைச்சர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறை, தொலைத்தொடர்பு, மீன்வளம், சிவில் விமானம், எரிசக்தி, துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழி, புவி அறிவியல் ஆகிய அமைச்சகங்கள்/ துறைகளின் செயலாளர்கள், ரயில்வே வாரிய தலைவர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலர், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர்கள், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
-----
(Release ID: 1721067)
Visitor Counter : 304
Read this release in:
Kannada
,
Assamese
,
Odia
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati