உள்துறை அமைச்சகம்

யாஸ் புயல் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டம் நடைபெற்றது

Posted On: 22 MAY 2021 6:33PM by PIB Chennai

வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான மத்திய மற்றும் மாநில அமைச்சகங்கள்/முகமைகளின் தயார் நிலையை ஆய்வு செய்வதற்கான தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டம் அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபாவின் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய இந்திய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை மே 26 மாலை புயல் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்தார்.

புயலை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் குழுவிடம் தெரிவித்தனர். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. உணவு தானியங்கள், குடிதண்ணீர் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் சேமிக்கப்பட்டு இருப்பதோடு, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு ஆகிய அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 65 குழுக்கள் களத்திற்கு அனுப்பப்படுகின்றன. இன்னும் 20 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் கொவிட் பராமரிப்பு மையங்கள் தடையின்றி இயங்கவும், ஆக்சிஜன் விநியோகம் நாடு முழுவதும் தடையின்றி நடைபெறவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய மற்றும் மாநில முகமைகளின் தயார் நிலையை ஆய்வு செய்த திரு ராஜிவ் கவுபா, உயிரிழப்பு மற்றும் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புயல் காரணமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கடலுக்கு சென்றுள்ள படகுகள் மற்றும் கப்பல்கள் கரைக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கொவிட் மருத்துவமனைகள் மற்றும் மையங்களின்

செயல்பாடுகள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நோயாளிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் இதர முக்கிய சேவைகளை விரைந்து மீட்டமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தினார். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முகமைகளை அவர் கேட்டுக்கொண்டார்.

மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் புதுச்சேரியின் தலைமை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை, மின்சாரம், கப்பல், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, விமான போக்குவரத்து மற்றும் மீன்வளம் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள், ரயில்வே வாரிய தலைவர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்திய வானிலைத் துறை ஆகியவற்றின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

*************



(Release ID: 1720936) Visitor Counter : 184