இந்திய போட்டிகள் ஆணையம்

இந்திய போட்டியியல் ஆணையத்தின் 12-வது நிறுவன தினத்தை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

Posted On: 20 MAY 2021 6:07PM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையத்தின் 12-வது நிறுவன தின நிகழ்ச்சியை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார் 

2009 மே 20 அன்று இந்திய போட்டியியல் ஆணையம் போட்டியியல் சட்டம் 2002-ன் கீழ் நிறுவப்பட்டது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர், வேகமாக மாறிவரும் இந்திய மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் சந்தைகளோடு நட்பாக இருந்து, அதே சமயம் போட்டித் தன்மையை கண்காணிக்கும் அமைப்பின் தேவை குறித்து எடுத்துரைத்தார்.

நம்பகத்தன்மை மிக்க அமைப்பை உருவாக்குவதற்கான இந்திய போட்டியியல் ஆணையத்தின் முயற்சிகளை திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டினர். சுதந்திரமான சந்தை பொருளாதாரமாக மாறிவரும் இந்தியா போன்ற பொருளாதாரங்களில் இது மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

பெருந்தொற்றுக்கு பிறகு நிறுவனங்களின் புத்தாக்கத்தில் உள்ள சவால்கள் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், தொழில் நிறுவனங்களோடு இந்திய போட்டியியல் ஆணையம் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களின் சட்டபூர்வ கோரிக்கைகளுக்கு பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

புதிய இந்தியாவின் விரிவடைந்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பேசிய அமைச்சர், நியாயமான சந்தை செயல்பாடுகள் வளர்வதற்காக வேகமாகவும், பெரிய அளவிலும் தொலைநோக்குடனும் பணியாற்றுமாறு ஆணையத்தை கேட்டுக்கொண்டார்.

இந்திய போட்டியியல் ஆணையத்தின் போட்டி சட்டங்கள் மற்றும் கொள்கை குறித்த சஞ்சிகையையும், தமிழ், வங்கம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆணையத்தின் புத்தகங்களையும் திருமதி நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியின் போது வெளியிட்டார்.

 மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், மாறிவரும் சந்தை சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு வளரும் அமைப்பாக உருப்பெறுமாறு இந்திய போட்டியியல் ஆணையத்தை கேட்டுக்கொண்டார். போட்டி சட்டம் குறித்த அரை நாள் பயிற்சிப் பட்டறையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

*****************



(Release ID: 1720369) Visitor Counter : 376