சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் காமன்வெல்த் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் 33-வது கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி

Posted On: 20 MAY 2021 5:22PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக காமன்வெல்த்தின் ஒத்துழைப்பு: தடுப்பூசிகளை சமமாக வழங்குதல், மருத்துவ அமைப்புமுறைகள் மற்றும் அவசர கால நெகிழ் தன்மை கட்டமைத்தலை உறுதி செய்தல்என்ற கருப்பொருளில் காமன்வெல்த் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் 33-வது கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

பெருந்தொற்றினால் ஏற்பட்ட பேரழிவு பற்றிப் பேசிய அமைச்சர், “நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரம் ஏற்கனவே மிகவும் சரிந்துள்ளது. இதிலிருந்து மீள்வது கடினமாக இருக்கும், உலக நாடுகள் முழுவதும் பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகுதான் இந்தப் பணி விரைவடையும்”, என்று கூறினார். மேலும் இது குறித்துப் பேசுகையில், “ஏதேனும் ஒரு நாடு அல்லது பகுதியில் அச்சுறுத்தல் தொடர்ந்தால், அதனால் உலகம் முழுவதும் பாதிப்படையக்கூடும்.  எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது”, என்று அவர் எச்சரித்தார்.

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், “துரித பரிசோதனை, தனிமைப் படுத்துதல் மற்றும் சிகிச்சையுடன் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் தேசிய தடுப்பு உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் பெருந்தொற்றை  திறம்பட முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தொற்றுக்கு எதிரான அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு உலகம் முழுவதும் விரைவாக வழங்கப்பட வேண்டும். தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு, உற்பத்தி ஆகியவற்றுடன் பரிசோதனைகள், சிகிச்சை, தடுப்பூசிகள் அனைவருக்கும் சமமாக வழங்கப்படவேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சி சிறந்த பலனைத் தரும்”, என்று குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசித் தூணான கோவேக்ஸ், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட  சுமார் 92 நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 20% பேர் பயனடையும் வகையில் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் 2 பில்லியன் தடுப்பூசிகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சி மட்டுமே பலன் அளிக்காது என்றும் இதனுடன், வெளிப்படைத் தன்மை வாய்ந்த விலையில் அனைவருக்கும் சமமாக தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் பலதரப்பட்ட மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பும் அவசியம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

கொவிட் மேலாண்மையைத் தவிர அதற்கு முன்பாக காமன்வெல்த் நாடுகள் முன்வைத்த முக்கிய சுகாதார பிரச்சினைகள், தொற்றும் தன்மை அல்லாத நோய்கள், தடுப்பூசிகள், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டு அமைச்சர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் திருமிகு பேட்ரிசியா ஸ்காட்லாந்து, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720311

*****************



(Release ID: 1720365) Visitor Counter : 171