சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் ஆலை மற்றும் கொவிட் வார்டுகளை டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார்
Posted On:
19 MAY 2021 5:24PM by PIB Chennai
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலை மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் கொவிட் வார்டுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆய்வு செய்தார்.
இம்மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட உயர்ரக மருத்துவ வசதிகள் கொவிட் பாதிப்புகளின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின. மருத்துவமனையின் மருத்துவர்களோடு உரையாடிய அமைச்சர், கொவிட் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார்.
குறுகிய காலத்தில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் ஆலையை பார்வையிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் ஆலைகளை மிகவும் விரைவாக நாடு நிறுவியதாக குறிப்பிட்டார்.
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலை, மத்திய அரசால் நிறுவப்பட்ட மூன்றாவது ஆலையாகும். பி எம் கேர்ஸ் நிதி உதவியுடன் டிஆர்டிஓ-வால் ஒரு மெட்ரிக் டன் திறனுடைய இந்த ஆலை நிறுவப்பட்டது. இரண்டு மெட்ரிக் டன் திறனுடன் கூடிய மற்றொரு ஆலை இதே மருத்துவமனையில் விரைவில் நிறுவப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதுபோன்று 1051 ஆலைகள் நாடு முழுவதும் டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர் மற்றும் ஹைடெக் ஆகியவற்றின் உதவியோடு நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சிஎஸ்ஐஆர்- சிபிஆர்ஐ உதவியுடன் கட்டப்பட்டு வரும் கொவிட் வார்டுகளை பார்வையிட்ட அவர், அவற்றை விரைவில் கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினார். சிகிச்சை நெறிமுறைகளை மீறுவதால் கொவிட் தொடர்பான சுகாதார சிக்கல்கள் ஏற்படுவதாக கூறிய அமைச்சர், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஸ்டிராய்டு போன்ற மருந்துகளை நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார். விதிமுறைகளை பின்பற்றுமாறு மருத்துவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,89,851 நபர்கள் குணம் அடைந்ததாகவும், 2,67,334 புதிய பாதிப்புகள் பதிவானதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
**
(Release ID: 1720043)
Visitor Counter : 242