பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஹரியானாவில் 500 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை மையம்: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மாநில முதல்வர் திறந்து வைப்பு
Posted On:
16 MAY 2021 2:49PM by PIB Chennai
ஹரியானா மாநிலத்தின் பானிபட்டில் உள்ள பல்ஜட்டான் கிராமம் அருகே 500 படுக்கைகள் கொண்ட கொவிட் மருத்துவமனையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் ஹரியானா மாநில முதல்வர் திரு மனோகர் லால் ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள். ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் திரு அனில் விஜ், கர்னல் மக்களவை உறுப்பினர் திரு சஞ்சய் பாட்டியா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆதரவுடன் ஹரியானா அரசு இந்த மருத்துவமனையை நிறுவியுள்ளது. இந்த மருத்துவமனைக்குத் தேவையான பிராணவாயுவை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும். குரு தேக் பகதூர் சஞ்ஜீவனி கொவிட் மருத்துவமனை என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த மருத்துவமனையின் கட்டுமான பணி துவங்கியது. இதன் மூலம் அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். அரசு மருத்துவர்கள், மருத்துவ உள்ளுறைவாளர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் உட்பட 275 பேர் இந்த மருத்துவமனையில் பணி புரிவார்கள்.
நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர்களை பாதுகாத்து வருவதாகக் கூறினார். நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை தினசரி விநியோகிக்கும் பணியில் பெட்ரோலியம் மற்றும் எஃகுத் துறை ஆகியவை மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பெட்ரோல் நிலைய ஊழியர்கள், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளோர் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கும், பானிபட் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் உள்ள மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719070
*****************
(Release ID: 1719162)
Visitor Counter : 237