ஜல்சக்தி அமைச்சகம்

நீர் தர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜல் ஜீவன் இயக்கம் அறிவுரை

Posted On: 15 MAY 2021 4:03PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில், பொது நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நீர் தர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய ஜல் ஜீவன் இயக்கம்  அறிவுரை வழங்கியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றின் காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளடக்கிய பொது சுகாதாரத்தின் முக்கியத்துவமும், மேம்பட்ட பொது சுகாதாரத்திற்கு பாதுகாப்பான குடிநீர், சிறந்த துப்புரவு மற்றும் சுகாதாரத்தின் அவசியம் எடுத்துரைக்கப்படுகிறது. முறையான தண்ணீர் தர பரிசோதனை மற்றும் தக்க தருணத்தில் சரியான சீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் தண்ணீரினால் ஏற்படும் ஏராளமான நோய்களைத் தடுக்கலாம். நீர் தரக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக மக்கள், குறிப்பாக, குழந்தைகளை நோயிலிருந்து காப்பதுடன் விலைமதிப்பில்லா உயிர்களையும் பாதுகாக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 2%,  நீர் தர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். களப் பரிசோதனை கிட்களின் வாயிலாக தண்ணீரின் ஆதார நிலைகள்  சோதிக்கப்படும். அனைத்து குடி நீர் ஆதாரங்களும் ஆண்டிற்கு ஒருமுறை ரசாயன  மாசுக்காகவும், ஆண்டிற்கு இரண்டு முறைகள் நுண்ணுயிரியல் பிரச்சினைகளுக்காகவும் சோதனை செய்யப்பட வேண்டும்.

தண்ணீர் தர கண்காணிப்பு பற்றி உள்ளூர் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், பானி சமிதி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து நபர்களை மாநிலங்கள் கண்டறிந்து, கிராம அளவில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தண்ணீர் தர சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் சுகாதார ஆராய்ச்சி துறையுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம்- தண்ணீர் தர மேலாண்மை தகவல் முறை என்ற இணையதளமும் (https://jaljeevanmission.gov.in/ அல்லது  https://neer.icmr.org.in/website/main.php), செல்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தர பரிசோதனை சம்பந்தமான அனைத்து தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பொது மக்கள் தங்களது தண்ணீரின் மாதிரியை பரிசோதனை செய்வதற்காக சாதாரண கட்டணத்தில் அனைத்து ஆய்வகங்களும் இயங்கப்பட வேண்டும். இதன் மூலம், விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரம் குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை அதிகரிப்பதுடன், தண்ணீர் சுத்திகரிப்பான் உபகரணங்களின் தேவையும் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718803

*****************



(Release ID: 1718883) Visitor Counter : 173