அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டங்கள்

Posted On: 11 MAY 2021 1:51PM by PIB Chennai

தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டங்கள், குறைந்த செலவில் உள்நாட்டில் தீர்வுகளை உருவாக்கும் தொழில்முனைவு மனநிலையை அதிகரிப்பதாக அமைந்தது.

கடந்த 1998-ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டதைக் குறிக்கும் வகையிலும், அதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களை கௌரவிக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் இந்தியாவின் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கண்டுபிடிப்பாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் குறித்து தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளுக்காக 15 வெற்றியாளர்களை தலைசிறந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழிற் நுட்பனர்கள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகள், புதுமை நிறுவனங்களுக்கான விருதுகள் ஆகிய 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய தொழில் நிறுவனங்களுக்கும்புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க பாடுபடும் தொழில்நுட்பவாதிகளுக்கும் இந்த விருதுகளின் வாயிலாக அங்கீகாரம் கிடைப்பதுடன் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் அவர்களது பங்களிப்பும் இடம்பெறுகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர முகமைகள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தகரீதியான சந்தையை ஏற்படுத்திக் கொள்ளவும், இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பங்களைத் தழுவி புதிய கண்டுபிடிப்புகளை உள்நாட்டில் உருவாக்கவும் நிதி உதவி அளித்து வருகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு இந்த வாரியம் தொடங்கப்பட்டது முதல் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717635

-----


(Release ID: 1717708) Visitor Counter : 231