விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதில் தோட்டக்கலைத் துறை முக்கிய பங்காற்றலாம்

Posted On: 10 MAY 2021 5:03PM by PIB Chennai

விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதில் தோட்டக்கலை துறைக்கு உள்ள சாத்தியக்கூறுகளையும், பங்கையும் கருத்தில் கொண்டு அத்துறையின் வளர்ச்சிக்காக 2021-22 ஆம் ஆண்டில் ரூபாய் 2,250 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

நாட்டில் தோட்டக்கலைத் துறையின் முழு வளர்ச்சியை மேலும் ஊக்குவிப்பதற்காக, 'தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான இயக்கம்' எனும் மத்திய அரசு திட்டத்திற்கு 2021-22-ஆம் ஆண்டில் கூடுதல் ஒதுக்கீடாக ரூபாய் 2,250 கோடியை வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் வழங்கியுள்ளது.

பழங்கள், காய்கறிகள், வேர் பயிர்கள், காளான்கள், மசாலா பொருட்கள், பூக்கள், வாசனை செடிகள், தேங்காய், முந்திரி மற்றும் கொக்கோ ஆகியவற்றை உள்ளடக்கிய தோட்டக்கலைத் துறையின் சாத்தியக்கூறுகளை முழுவதும் அடைவதற்காக தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான இயக்கத்தை 2014-15-ஆம் ஆண்டு முதல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

முந்தைய வருடம் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டை விட இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகமாகும். வருடாந்திர செயல் திட்டங்களை வகுப்பதற்காக இந்த ஒதுக்கீடு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சிக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக நாட்டில் வேளாண் உற்பத்தியை விட தோட்டக்கலை உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளது. 2019-20-ஆம் ஆண்டில், 25.66 மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பரப்பில் 320.77 மில்லியன் டன்கள் உற்பத்தியை நாடு பதிவு செய்தது. இதுவரையிலான தோட்டக்கலை உற்பத்தியில் இதுவே அதிகமாகும்.

2020-21-ஆம் ஆண்டுக்கான முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, நாட்டில் தோட்டக்கலை உற்பத்தி 27.17 லட்சம் ஹெக்டேர்கள் நிலப்பரப்பில் 326.58 மில்லியன் டன்களாக இருக்கும்.

இருந்த போதிலும், உற்பத்திக்குப் பிந்தைய நஷ்டங்கள் மற்றும் விநியோக சங்கிலி உள்கட்டமைப்பில் உள்ள சிக்கல்களின் காரணமாக பல்வேறு சவால்களை இத்துறை இன்னமும் சந்தித்து வருகிறது. 2050-ஆம் ஆண்டில் நாட்டின் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான தேவை 650 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இத்துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

பயிர் வகைகளின் உற்பத்தி மீதான கவனம், குழு மேம்பாட்டு திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதி மூலம் கடன் வசதிகள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகிய நடவடிக்கைகள் சரியான பாதையில் கொண்டுச் செல்லும்.

 

***(Release ID: 1717496) Visitor Counter : 303