பாதுகாப்பு அமைச்சகம்

தில்லி மற்றும் ஹரியானாவில் 4 மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள்: டிஆர்டிஓ அமைக்கிறது

Posted On: 04 MAY 2021 6:26PM by PIB Chennai

கொவிட்-19 நோயாளிகள் அதிகரிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்ததை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் 500 மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கு பிரதமரின் நல நிதி அமைப்பு, நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. 

இந்த ஆலைகள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படவுள்ளன. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) தனது தொழிற்சாலைகள் மூலம், தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் 5 மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்கிறது.  தில்லி எய்ம்ஸ், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரி மற்றும் ஹரியானா ஜாஜர் பகுதியில் உள்ள எய்ம்ஸ் ஆகிய இடங்களில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன.  

திட்டமிட்டபடி, இதில் 2 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தில்லிக்கு கிடைக்கின்றன. இவை எய்ம்ஸ் மற்றும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளில் நிறுவப்படுகின்றன.  இவற்றை டிஆர்டிஓவின் தொழில்நுட்ப பங்குதாரரான கோவையில் உள்ள டிரைடன்ட்  நிமாட்டிக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கு இது போல் 48 ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் 332 ஆலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.  இவற்றின் விநியோகம் இம்மாதம் மத்தியில் தொடங்கும். அதே நேரத்தில் இதற்கான இடங்களும் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தயார்படுத்தப்படுகின்றன.

இவை நிமிடத்துக்கு 1,000 லிட்டர்  திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவியால் 190 நோயாளிகளுக்கு நிமிடத்துக்கு 5 லிட்டர் என்ற அளவிலும், நாள் ஒன்றுக்கு 195 சிலிண்டர் என்ற அளவிலும் ஆக்ஸிஜனை விநியோகிக்க முடியும். 

இந்த மருத்துவ ஆக்ஸிஜன் ஆலை தொழில்நுட்பத்தை, தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. 

இந்த ஆலைகள் ஆக்ஸிஜன் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் மற்றும் கொவிட் நோயாளிகளுக்கு அவசர காலத்தில் உதவும். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) தனது தொழிற்சாலைகள் மூலம் 120 மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

*****************


(Release ID: 1716000) Visitor Counter : 244