பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

Posted On: 04 MAY 2021 6:11PM by PIB Chennai

அனைத்து மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை பணியாளர் மற்றும் பயிற்சி துறை 2021 ஏப்ரல் 22 அன்று வெளியிட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்த அமைச்சர், பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக பணியாளர் மற்றும் பயிற்சி துறை எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு பின்னரும் அடிக்கடி கைகளைக் கழுவுதல், கிருமி நாசினியை உபயோகித்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட சரியான கொவிட் நடத்தை விதிமுறையை பின்பற்றுமாறு அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டுள்ள இதர தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

 2021 மே 31 வரை அமலில் இருக்கப்போகும் விதிமுறைகள்/வழிகாட்டுதல்கள் முழு அளவில் அனைவராலும் பின்பற்றப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். கொவிட் காரணமாக அலுவலகப் பணிகள் பாதிப்படைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார்.

பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் வழிகாட்டுதல்களை போன்றே, அதே சமயம் உள்ளூர் நிலைமையை கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதுமாறும் பணியாளர் மற்றும் பயிற்சி துறையை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நிலைமையை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒரு வருடமாக பல்வேறு வழிகாட்டுதல்களை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உருவாக்கியுள்ளதாகவும், அத்துறை உருவாக்கிய வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையானது வெற்றிகரமாக அமைந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1715954

*****************



(Release ID: 1715997) Visitor Counter : 161