குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆளுகை செயல்முறையை முறைப்படுத்த வேண்டும், சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
20 MAR 2021 5:46PM by PIB Chennai
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது மட்டுமே நல்லாட்சியின் ஆகச்சிறந்த வெற்றியாக இருக்க முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.
இந்திய அரசின் முன்னாள் செயலாளர் டாக்டர் எம் ராமச்சந்திரன் எழுதிய 'அரசையும் மக்களையும் அருகருகே கொண்டு வருதல்' (Bringing Governments and People Closer) என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசிய திரு நாயுடு, ஆளுகை செயல்முறையை முறைப்படுத்த வேண்டும் மற்றும் சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என்று கூறினார்.
அடிப்படை சேவைகளை பெறுவதற்கு மக்கள் போராடக் கூடாது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், வசதிகளை மேம்படுத்துவதற்காக நம்பிக்கை சார்ந்த ஆளுகையை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
லட்சியம் மற்றும் செயல்பாட்டுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் வெளிப்பாடுகள் சார்ந்த அணுகுமுறையை ஆளுகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் திரு நாயுடு கேட்டுக் கொண்டார்.
நகர்ப்புற நிர்வாகத்தின் கவனம் வாழ்க்கை திறனின் மீது இருக்க வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அதிகாரங்களை பரவலாக்கி, பஞ்சாயத்துகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
புத்தகத்தை வெளியிடுவதற்காக காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய திரு நாயுடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், மக்களின் தேவைகளை துடிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், அக்கறையுடன் கூடிய அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரசு அலுவலகங்களில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி பேசிய அவர், முக்கிய சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற குடிமக்கள் சாசனங்களில் சேவைகளை வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சமீபத்திய வரி சீர்திருத்தங்களான முகமில்லா மதிப்பீட்டு முறை மற்றும் மேல்முறையீட்டு முறை போன்றவை வரி செலுத்துபவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான நேர்முகத் தொடர்பை நீக்கி உள்ளதாக கூறினார்.
இதுபோல இன்னும் பல புதுமைகளை தொழில்நுட்பத்தின் உதவியோடு புகுத்த வேண்டும் என்றும் அதிகளவிலான இந்திய மொழிகள் ஆளுகையின் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மொழிகளின் பயன்பாட்டு பற்றி மேலும் பேசிய திரு நாயுடு, அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்களில் மக்களுக்கு புரியும் மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பொதுவாழ்வில் சிறப்பாக செயல்படவும், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரவும் ஆளுகை செயல் முறைகளில் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் கூறினார்
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706310
*****************
(Release ID: 1706331)
Visitor Counter : 162