பிரதமர் அலுவலகம்
நான்காவது சர்வதேச ஆயுர்வேத திருவிழாவில் பிரதமரின் உரை
Posted On:
12 MAR 2021 10:11PM by PIB Chennai
அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய அமைச்சரவை சகாக்கள் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, திரு முரளிதரன் அவர்களே, சர்வதேச ஆயுர்வேத திருவிழாவின் தலைமை இயக்குநர் டாக்டர் கங்காதரன் அவர்களே, ஃபிக்கி அமைப்பின் தலைவர் உதய் சங்கர் அவர்களே, டாக்டர் சங்கீதா ரெட்டி அவர்களே.
அன்பு நண்பர்களே,
நான்காவது சர்வதேச ஆயுர்வேத திருவிழாவில் உரையாற்றுவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பல நிபுணர்கள் தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
25-க்கும் அதிகமான நாடுகள் இதில் கலந்து கொண்டுள்ளன. இது நல்ல அறிகுறியாகும். ஆயுர்வேத துறையில் உலகெங்கும் பணிபுரிபவர்களின் முயற்சிகளை இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் பாராட்டுகிறேன். அவர்களின் ஆர்வமும் முயற்சிகளும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை பயக்கும்.
நண்பர்களே
இந்தியக் கலாச்சாரம் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் வழங்கும் மரியாதையுடன் ஆயுர்வேதம் நெருக்கமாக இணைந்துள்ளது. நமது இலக்கியங்கள் ஆயுர்வேதத்தைப் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளன. பல்வேறு விஷயங்களை ஆயுர்வேதம் கவனத்தில் கொள்கிறது.
நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அது உறுதி செய்கிறது. முழுமையான மனித அறிவியல் என்று ஆயுர்வேதத்தை சரியாக வர்ணிக்கலாம். உங்கள் தட்டில் இருக்கும் தாவரங்களிலிருந்து, உடல் வலிமைக்கான பொருட்கள் முதல் மனவலிமை வரை ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் தாக்கமும் ஊக்கமும் அளப்பரியது
நண்பர்களே,
ஏற்கனவே இருக்கும் நோய்களை குணப்படுத்துவதோடு உடலின் ஒட்டுமொத்த நலனையும் ஆயுர்வேதம் பாதுகாக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. நோயை விட உடல் நலனைப் பற்றியே ஆயுர்வேதம் அதிகம் பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த காலத்தில் வைத்தியரிடம் ஒருவர் சென்றால், மருந்து மட்டுமில்லாது, 'உங்களது உணவை எந்தவித பதட்டமும் இல்லாமல் அனுபவியுங்கள். ஒவ்வொரு வாய் உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். அதை பொறுமையாக மென்று உண்ணுங்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் மறுபடியும் வைத்தியரிடம் வர வேண்டியதில்லை,' போன்ற தத்துவங்களையும் பெற்றனர்.
நண்பர்களே,
2020 ஜூன் மாதத்தில் பினான்சியல் டைம்ஸ் இதழில் கட்டுரை ஒன்றை நான் படித்தேன். உடல் நலம் அளிக்கும் சிறப்பு வாய்ந்த பொருட்கள் கொரோனா வைரஸ் மூலம் ஊக்கம் பெற்றுள்ளதை பற்றிய கட்டுரை அது. கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று காரணமாக மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அது கூறியிருந்தது.
ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருந்துகள் உலகம் முழுவதும் இன்னும் பிரபலம் அடைவதற்கான சரியான வாய்ப்பை தற்போதைய நிலைமை வழங்குகிறது. அவற்றின் மீதான ஆர்வம் வளர்ந்து வருகிறது. உடல் நலத்தை மேலும் பேண நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவங்கள் ஆகிய இரண்டுமே முக்கியம் என்று உலகம் நினைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேதத்தின் பங்கையும் அதன் பலன்களையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். காதா, துளசி, கருமிளகு ஆகியவற்றை தங்களது வாழ்க்கையின் இன்றியமையாத அங்கங்களாக மக்கள் ஆக்கி வருகிறார்கள்.
நண்பர்களே,
சுற்றுலா பல்வேறு கூறுகளை இன்றைக்கு கொண்டுள்ளது. ஆனால், ஆரோக்கியச் சுற்றுலாவை இந்தியா உங்களுக்கு சிறப்பான முறையில் வழங்குகிறது. ஆரோக்கியச் சுற்றுலா என்பதை நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். உடல்நல சுற்றுலாவின் அடிநாதமாக விளங்குவது நோய்க்கு சிகிச்சை அளித்து உடல் நலத்தை மேம்படுத்துவது ஆகும்.
உடல்நல சுற்றுலாவின் வலிமை வாய்ந்த தூணாக ஆயுர்வேதமும் பாரம்பரிய மருத்துவமும் விளங்குகிறது. அழகான மாநிலமான கேரளாவில் பசுமையான சூழலில் இயற்கை சிகிச்சையை நீங்கள் பெறுவதை கற்பனை செய்து பாருங்கள்.
பாய்ந்தோடும் ஆறு மற்றும் மலையில் இருந்து வீசும் காற்றுக்கு நடுவே உத்தரகாண்டில் நீங்கள் யோகா செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.
வடகிழக்கின் பசுமை காடுகளுக்கு நடுவே உங்களை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். வாழ்க்கை உங்களை சோர்வு அல்லது அழுத்தத்திற்கு உள்ளாக்கினால், இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தின் நன்மைகளை நீங்கள் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
உங்கள் உடல் அல்லது மனம், இரண்டில் எதற்கு நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விரும்பினாலும் இந்தியாவுக்கு வாருங்கள்
நண்பர்களே,
ஆயுர்வேதத்தின் புகழைப் பயன்படுத்தி பாரம்பரிய மற்றும் நவீன முறைகளை ஒன்றிணைப்பதால் ஏற்படும் வாய்ப்புகளை நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத பொருட்களை பெருமளவில் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆதாரம் சார்ந்த மருத்துவ அறிவியல் உடன் ஆயுர்வேதத்தை இணைப்பதற்கான ஆர்வம் வளர்ந்து வருகிறது. ஆயுர்வேத பொருட்கள் பிரபலமடைந்து வருகின்றன. ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த ஆராய்ச்சியை ஆழப்படுத்துமாறு கள்வியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆயுர்வேத பொருட்களின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் நமது பாரம்பரிய சிகிச்சை முறைகளை வெளிப்படுத்துவதற்காக இளைஞர்களை நான் பாராட்டுகிறேன்.
நமது பாரம்பரியமும் இளைஞர்களின் உணர்வும் மாயாஜாலங்களை உருவாக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.
நண்பர்களே,
ஆயுர்வேத துறைக்கு அரசு முழு ஆதரவு வழங்கும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஆயுஷ் மருத்துவ முறைகளை விலை குறைந்த ஆயுஷ் சேவைகள் மூலம் பிரபலப்படுத்துவதற்காக தேசிய ஆயுஷ் இயக்கம் தொடங்கப்பட்டது. கல்வி முறைகளை வலுப்படுத்துவதற்கும், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தரங்களை உறுதிப்படுத்துவதற்கும், மூலப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அது பணியாற்றி வருகிறது.
பல்வேறு தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஆயுர்வேதம் மற்றும் இதர இந்திய மருத்துவ முறைகள் குறித்த நமது கொள்கை உலக சுகாதார நிறுவனத்தின் 2014-2023 பாரம்பரிய மருத்துவ திட்டத்தோடு ஒத்துள்ளது.
இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவ உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம்.
ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து கற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கி மாணவர்கள் வருகிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உலகளாவிய ஆரோக்கியம் குறித்து சிந்திப்பதற்கான சரியான நேரம் இது. இது குறித்த சர்வதேச உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
ஆயுர்வேதம் சார்ந்த மற்றும் உடல் நலத்தை மேம்படுத்த கூடிய உணவுப் பொருட்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டை சர்வதேச திணை ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
திணையின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
காந்தியடிகளின் சொற்களோடு இந்த உரையை நான் நிறைவு செய்கிறேன். 'ஆயுர்வேதத்தை பற்றி நான் மிகவும் உயர்வாக நினைக்கிறேன். இந்தியாவின் பண்டைய அறிவியல் முறைகளில் ஒன்றான அது, ஆயிரக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்களின் உடல் நலனை உறுதி செய்கிறது.
ஆயுர்வேத கோட்பாடுகளை பின்பற்றி வாழுமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.'
100 வருடங்களுக்கு முன்னர் இதை காந்தியடிகள் கூறியிருந்தாலும், இன்றைக்கும் இது பொருத்தமாக உள்ளது.
ஆயுர்வேதத்தில் நமது சாதனைகளை நாம் தொடர்ந்து கட்டமைப்போம். உலகை நமது நாட்டுக்கு கொண்டு வரும் சக்தியாக ஆயுர்வேதம் இருக்கட்டும்.
நமது இளைஞர்களுக்கு அது வளத்தை உண்டாக்கட்டும். இந்த மாநாடு வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். இதில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி,
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
-----
(Release ID: 1704636)
Visitor Counter : 266
Read this release in:
Assamese
,
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam