பிரதமர் அலுவலகம்

கல்வித்துறை தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரை


கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு திறன்களுடன் இணைக்க எடுத்த முயற்சிகளை பட்ஜெட் விரிவாக்குகிறது

Posted On: 03 MAR 2021 12:26PM by PIB Chennai

கல்வித்துறை தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த இணைய கருத்தரங்கில் பேசிய பிரதமர், தற்சார்பு இந்தியாவை உருவாக்க, நாட்டில் உள்ள இளைஞர்களின் நம்பிக்கை சமஅளவில் முக்கியமானது. இளைஞர்களுக்கு தங்களின் கல்வியிலும், அறிவிலும், முழு நம்பிக்கை இருக்கும்போதுதான், தன்னம்பிக்கை ஏற்படும்.  தங்களது படிப்புகள், வேலை வாய்ப்பு மற்றும் தேவையான திறமைகளை வழங்கும்போதுதான் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.  இந்த சிந்தனையுடன் தான் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆரம்ப கல்விக்கு முந்தைய வகுப்புகளில் இருந்து பி.எச்.டி ஆய்வு படிப்புகள் வரை தேசிய கல்வி கொள்கையின் விதிமுறைகளை விரைவாக அமல்படுத்த வேண்டும், இதற்கு பட்ஜெட் அதிக உதவியை அளிக்கும்  என அவர் வலியுறுத்தினார்.

பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு அடுத்த படியாக இந்தாண்டில், மிகப் பெரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டது கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீது ஆகும். நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இடையே சிறந்த ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.  திறன் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சிக்கு இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இதற்கு முன் இல்லாதது. பல ஆண்டுகளாக கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு திறன்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை இந்த பட்ஜெட் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் காரணமாக, அறிவியல் வெளியீடுகள், பி.எச்.டி ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை, மற்றும் தொடக்க நிறுவனங்களின் சூழல் ஆகியவற்றில் உலகின் முதன் மூன்று நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில், முதல் 50 இடங்களில் இந்தியாவும் இணைந்துள்ளது மற்றும் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது.  உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதால், மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் புதிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

பள்ளிகளில் உள்ள அடல் பயிற்சி கூடங்கள் முதல் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள பயிற்சி மையங்கள் வரை பல விஷயங்களில் முதல் முறையாக கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார்.  தொடக்க நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப போட்டி என்ற புதிய பாரம்பரியம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தொழில்நுட்ப போட்டி, நாட்டின் இளைஞர்களுக்கும், தொழிற்துறைக்கும் மிகப் பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. புதுமைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும், தேசிய முன்முயற்சி மூலம், 3500-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள்  வளர்க்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல், தேசிய சூப்பர் கம்யூட்டர் திட்டம் மூலம், பரம் சிவய், பரம் சக்தி மற்றும் பரம் பிரம்மா என்ற மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் புவனேஸ்வர் ஐஐடி, காரக்பூர் ஐஐடி மற்றும் புனே ஐஐஎஸ்இஆர்  ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள இன்னும் பல உயர் நிறுவனங்கள் சூப்பர் கம்ப்யூட்டர்கள் பெறவுள்ளன என அவர் தெரிவித்தார்.  காரக்பூர் ஐஐடி, தில்லி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி ஆகியவற்றில்  3 அதி நவீன  பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி மையங்கள் செயல்படுகின்றன என அவர் கூறினார்.

அறிவையும் ஆராய்ச்சியையும் கட்டுப்படுத்துவது நாட்டின் ஆற்றலுக்கு பெரும் அநீதி என கூறிய பிரதமர்திறமையான இளைஞர்களுக்கு விண்வெளி, அணுசக்தி, டிஆர்டிஓ மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் பல வழிகள் திறந்துவிடப்படுகின்றன என்றார்.  வானிலை தொடர்பான விஷயங்களில், முதல் முறையாக  சர்வதேச தரத்தை நாடு எட்டியுள்ளது. இது  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது மற்றும் நமது உலகளாவிய போட்டித்திறயையும் அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.   புவி-இடம் சார்ந்த தரவுகள்  சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன, இது விண்வெளித் துறை மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.  ஒட்டு மொத்த  சூழலியலும் அதிகம் பயனடையும்.  தேசிய ஆய்வு நிறுவனமும், நாட்டில் முதல் முறையாக அமைக்கப்படுகிறது என அவர் கூறினார். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொடர்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும்.  உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது, அரசின் முன்னுரிமைகளை காட்டுகிறது என பிரதமர் கூறினார்.  உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வேளாண்மையில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். 

இந்திய திறமைசாலிகளிக்கு தேவை அதிகமாக உள்ளதை குறிப்பிட்ட பிரதமர்திறமைசாலிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அதற்கேற்ப இளைஞர்களை தயார் செய்ய வேண்டும் என்றும், திறன் மேம்பாட்டுக்கு சர்வதேச நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  இந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள எளிதான பயிற்சித் திட்டம்நாட்டின் இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

எரிசக்தி துறையில் தன்னம்பிக்கைக்கு, எதிர்கால எரிபொருள் மற்றும் பசுமை எரிசக்தி அவசியம் என திரு நரேந்திர மோடி கூறினார்.  இதற்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஹைட்ரஜன் திட்டம் தீவிரமான வாக்குறுதி ஆகும்.  ஹைட்ரஜன் வாகனத்தை இந்தியா பரிசோதித்துள்ளது என தெரிவித்த அவர், ஹைட்ரஜனை போக்குவரத்துக்கான எரிபொருளாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொண்டு நமது தொழில்துறையை தயார்படுத்த  வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்துவதற்கு, புதிய கல்வி கொள்கை ஊக்குவித்துள்ளது என பிரதமர் கூறினார்.  நாட்டின் மற்றும் உலகின் சிறந்த விஷயங்களை இந்திய மொழிகளில் தயாரிக்க வேண்டியது, இனி  கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு மொழி நிபுணர்களின் பொறுப்பு என அவர் கூறினார். தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியம்.  இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேசிய மொழி பெயர்பு திட்டம்இது தொடர்பான வெற்றியை உறுதி செய்யும் என அவர் வலியுறுத்தி கூறினார்.  

***************


(Release ID: 1702249) Visitor Counter : 254