ஜவுளித்துறை அமைச்சகம்

இந்திய பொம்மை கண்காட்சி 2021-ஐ பிப்ரவரி 27-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்

Posted On: 25 FEB 2021 5:36PM by PIB Chennai

இந்திய பொம்மை கண்காட்சி 2021-ஐ வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார்.

பொம்மைகள், குழந்தையின் மன வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதுடன், அவர்களின் உளவியல் தசைகளின் இயக்கம் மற்றும் அறிவாற்றல் திறமைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

 கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில், செயல்களை ஊக்கப்படுத்துவதில் மட்டுமல்லாமல், லட்சியங்களை நோக்கி முன்னேறச் செய்யும் உந்து சக்தியாகவும் பொம்மைகள் விளங்குவதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் பொம்மைகளின் முக்கிய பங்கை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் பொம்மைகளின் தயாரிப்பை ஊக்குவிப்பது பற்றியும் முன்னதாக வலியுறுத்தினார். பிரதமரின் இந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்திய பொம்மை கண்காட்சி 2021 நடைபெறவிருக்கிறது.

கண்காட்சியை பற்றி:

இந்த கண்காட்சி பிப்ரவரி 27 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும். நிலையான இணைப்புகளை உருவாக்கவும், பொம்மை தொழிலில் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த விவாதங்களை ஊக்குவிக்கவும் வாங்குவோர், விற்பனையாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் காணொலி வாயிலாக இணைப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்தத் துறையில் முதலீடுகளை அதிகரித்து ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதன் வாயிலாக பொம்மைகளின் தயாரிப்பு மற்றும் பிறப்பிடமாக, சர்வதேச முனையமாக  இந்தியாவை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து அரசும் தொழில்துறையும் இந்தத் தளத்தின் வாயிலாக ஆலோசனையில் ஈடுபடும்.

மின் வர்த்தக வசதியுடன் கூடிய இந்த காணொலிக் கண்காட்சியில் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துவர்.

 பாரம்பரிய இந்திய பொம்மைகளுடன் மின்சார பொம்மைகள், பூம்பட்டாலான பொம்மைகள், புதிர்கள், விளையாட்டுக்கள் போன்ற நவீன பொம்மைகளும் இதில் இடம்பெறும்.

 பொம்மைகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் திறமை வாய்ந்த பிரபல இந்திய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளும், விவாத நிகழ்ச்சிகளும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும்.

 பாரம்பரிய பொம்மைகளின் கைவினை கலைப் பொருட்களின் செயல் விளக்கம், பொம்மை அருங்காட்சியகங்கள் மற்றும் ஆலைகளை காணொலி‌ வாயிலாகக் கண்டு ரசிப்பது போன்ற ஏராளமான வாய்ப்புகள் இந்த கண்காட்சியின் மூலமாக குழந்தைகளுக்கு வழங்கப்படும்.



(Release ID: 1700829) Visitor Counter : 203