மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘சர்வதேச தாய்மொழி தினம்’: வலைதள கருத்தரங்கை தொடங்கி வைத்தார் குடியரசு துணைத் தலைவர்
Posted On:
21 FEB 2021 5:27PM by PIB Chennai
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலைதள கருத்தரங்கை குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.
‘கல்வி மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு மொழிகளை கற்றல்’ என்ற தலைப்பிலான இந்த இணையதள கருத்தரங்கை கல்வி அமைச்சகம் கலாச்சார அமைச்சகம், இந்திராகாந்தி தேசிய கலை மையம் ஆகியவை நடத்தின.
சர்வதேச காணொலி கையெழுத்து கண்காட்சியையும் குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', கலாச்சார அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல், கல்வி இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்று திரு. எம். வெங்கையாநாயுடு கோரிக்கை விடுத்தார். அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதன் மூலம் குழந்தைகளின் சுயமரியாதை ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்களது படைப்பாற்றலும் மேன்மையடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாய்மொழியை ஊக்குவிப்பதற்காக 5 முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அடிப்படைக் கல்வியுடன், நிர்வாகம், நீதிமன்ற நடவடிக்கைகள், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஆகிய துறைகள் தாய்மொழியில் இயங்குவதோடு, அவரவர் வீடுகளிலும் மக்கள் தங்களது தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. பொக்ரியால், மொழியின் முக்கியத்துவம் தேசிய ஒற்றுமையை மட்டுமே சார்ந்தது அல்ல என்றும், நாட்டின் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதும் தான் என்றும் கூறினார்.
ஆறு வயதிற்குள் குழந்தைகளின் 90 சதவீத மூளை வளர்ச்சி அடைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது என்று கூறிய அமைச்சர், நமது குழந்தைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாய் மொழி வாயிலாக அவர்களுக்கு கல்வியை பயிற்றுவிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.தாய் மொழிகளின் வளர்ச்சிக்கு தேசிய கல்வி கொள்கை 2021-இல் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் திரு. பிரகலாத் படேல், ஒவ்வொரு தாய் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது என்றும், தாய் மொழியில் பேசும் போது கூடுதல் நெருக்கம் ஏற்படுவதை அனைவரும் உணர்வதாகவும் தெரிவித்தார்.
நமது தனித்தன்மையின் வளர்ச்சியில் கலாச்சாரம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போல் நமது தனித்தன்மையை நமது தாய் மொழியும் வலுப்படுத்துகிறது என்றார் அவர்.
இந்த வலைதள கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே, உலகளவில் பேசப்படும் மொழிகளைப் பாதுகாத்து, கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்கப்படுத்துவது சர்வதேச தாய்மொழி தினத்தின் நோக்கமாகும் என்றும், இந்திய கல்வி முறையில் தாய்மொழியை வலுப்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளை பாதுகாக்கவும் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699792
(Release ID: 1699804)