குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தொற்று அல்லாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்குமாறு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 20 FEB 2021 12:21PM by PIB Chennai

தொற்று அல்லாத நோய்கள் நாட்டில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமர்ந்தபடியே பணிகள் மேற்கொள்வதையும், முறையற்ற உணவுப் பழக்கங்களையும் கைவிட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள மரபணு விரல்ரேகைகள் மற்றும் பரிசோதனை மையத்தை பார்வையிட்ட பின் விஞ்ஞானிகளிடையே பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளில், இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகளில் 61% இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற தொற்று அல்லாத  நோய்களால் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

இந்தப் போக்கைத் தடுப்பதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து மிகப்பெரிய தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு. நாயுடு வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

மரபியல் நோய்கள் பற்றி பேசிய குடியரசு துணைத் தலைவர், பல்வேறு மரபியல் நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த செலவில், எளிமையான பரிசோதனை முறைகளை விஞ்ஞானிகள் கண்டறியுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளிடையே காணப்படும் அரிய மரபியல் நோய்களுக்கான ஆய்வகத்தையும் திரு. வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

உலகம் முழுவதும் சுமார் 350 மில்லியன் மக்களும், இந்தியாவில் சுமார் 70 மில்லியன் பேரும் அரிய நோய்களால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை இல்லாததால் இது போன்ற அரிய நோய்களால்  பொருளாதாரத்திலும்சமூக கட்டமைப்பிலும் பெரும் தாக்கம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றின் பரிசோதனையில் துல்லியமான முடிவுகளை வழங்கிய மரபணு விரல்ரேகைகள் மற்றும் பரிசோதனை மையத்தின் போராளிகளை திரு. வெங்கையா நாயுடு வெகுவாக பாராட்டினார். இந்திய மக்கள்தொகையில் பரவும் கொரோனா தொற்றின் தன்மையை அறிந்து இந்த மையம் செயல்பட்டதையும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் திரு. முஹம்மத் மஹ்மூத் அலி, மரபணு விரல்ரேகைகள் மற்றும் பரிசோதனை மையத்தின் இயக்குநர் டாக்டர் கே தங்கராஜ், உயிரி தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள்  உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699591


(Release ID: 1699630) Visitor Counter : 261