பாதுகாப்பு அமைச்சகம்
வங்கதேச கடற்படை கப்பல் ‘ப்ரோட்டாய்’ மும்பைக்கு வருகை
Posted On:
16 FEB 2021 5:00PM by PIB Chennai
வங்கதேச கடற்படை கப்பலான ‘ப்ரோட்டாய்’, 2021 பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு வந்தது. கேப்டன் அகமது அமீன் அப்துல்லா தலைமையிலான 137 பேரை கொண்ட இக்கப்பல் மும்பை துறைமுக பொறுப்புக் கழகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக, வழக்கமான சந்திப்புகள், சமூக கூட்டங்கள், பரிமாற்ற பயணங்கள், இரு நாடுகளின் கடற்படையினருக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை தவிர்க்கப்பட்டன.
வங்க தேசத்தின் பொன்விழா சுதந்திர தினத்தை இரு நாடுகளும் சமீபத்தில் கொண்டாடிய நிலையில், இக்கப்பல் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 50 ஆண்டு கால சுதந்திரத்தை குறிக்கும் விதமாக, வங்கதேசத்தின் ராணுவ வீரர்களும், ராணுவ இசைக்குழுவினரும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர்.
வங்கதேசம் உருவானதில் இருந்து, இந்தியாவும் வங்கதேசமும் உத்தி சார்ந்த மற்றும் பாதுகாப்பு உறவுகளில் நீண்ட தூரம் முன்னேறியிருக்கின்றன. பரஸ்பர நம்பிக்கையின் காரணமாக இந்த உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன.
-----
(Release ID: 1698514)
Visitor Counter : 200