வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
முக்கிய துறைகளில் ஒட்டு மொத்த வளர்ச்சி குறைவு: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
Posted On:
12 FEB 2021 4:41PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சாம் பிரகாஷ் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* திடீரென ஏற்பட்ட கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் முக்கிய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந்தியாவிலும், தேசியளவிலான முடக்கம் காரணமாக பல துறைகளில் வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது.
* ஆனால் முடக்கம் தளர்த்தப்பட்டவுடன், பொருளாதாரத்தின் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டன. கடந்த 2020 ஏப்ரல் மாதம் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளில் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம் கடுமையாக குறைந்தது.
* தொழில்துறை உற்பத்தி, உள்நாட்டு மொத்த உற்பத்தியை ஊக்குவிக்க, பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. திவால் மற்றும் நொடிப்பு நிலை விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. ஜிஎஸ்டி வரி எளிமையாக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, மேக் இன் இந்தியா திட்டம் ஊக்குவிக்கப்பட்டது. கொவிட்-19 தொற்று பாதிப்பை எதிர்த்து போராட ரூ.27.1 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதார நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
* மின்-வர்த்தக நடவடிக்கைகளை நிர்வகிக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், நிதி சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம், போட்டிகள் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது.
* அன்னிய நேரடி முதலீட்டுடன் கூடிய இ-வர்த்தக நிறுவனங்கள்/தளங்கள் ஆகியவை அன்னிய செலாவணி மேலாண்மை விதிமுறைகளின் படி ஒழுங்கு முறைப்படுத்தப்படுகின்றன.
* மின்-வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக, அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுக்களை அரசு பெற்றுள்ளது. விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளதால், இந்த மனுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சாம் பிரகாஷ் தெரிவித்தார்.
*****************
(Release ID: 1697387)
Visitor Counter : 150