விண்வெளித்துறை

33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக் கோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 10 FEB 2021 4:18PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

திறன் வளர்த்தலுக்காகவும், செயற்கைக்கோள்களை ஏவுவதற்காகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு 2020-21 நிதியாண்டில் ரூ 900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது. இதன் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களும், 189 மில்லியன் யூரோக்களும் இது வரை ஈட்டப்பட்டுள்ளன.

விண்வெளித்துறை செயல்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்பு, புதிய தொழில்நுட்பங்கள், புதிய பயன்பாடுகள் மற்றும் புதிய சேவைகளுக்கு வழிவகுக்கும். செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தவும், நிதி தொடர்பானவற்றில் தற்சார்படையவும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்னும் பொதுத்துறை நிறுவனத்தை அரசு நிறுவியுள்ளது.

தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்காகவும், வசதிகளை பகிர்ந்து கொள்ளவும் 26 நிறுவனங்கள்/புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை அணுகியுள்ளன.

நாவ்ஐசி எனப்படும் சுதந்திரமான செயற்கைக்கோள் சார்ந்த முறையை, இந்தியாவில் உள்ள மற்றும் நாட்டின் 1500 கி.மீ பரப்பளவில் உள்ள பயனர்களுக்காக அரசு உருவாக்கி, செயல்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பயிற்சிக்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் தொடர்பாக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டுள்ளது.

ககன்யானின் அடிப்படை வடிவமைப்பு நிறைவடைந்து விட்டது. இது தொடர்பாக இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏழு ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கும், கீழ்காணும் ஆங்கில செய்தி குறிப்புகளை பார்க்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1696776

                                                                                                              -------



(Release ID: 1696856) Visitor Counter : 250