நிதி அமைச்சகம்

மின்சாரத் துறை சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது ஆந்திரா

Posted On: 04 FEB 2021 6:00PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத்துள்ள மின்சாரத்துறை சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ள இரண்டாவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது.

இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2020 செப்டம்பரில் இருந்து மின்சார மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தும் செயல்முறையை அம்மாநிலம் தொடங்கியுள்ளது. இதன் மூலம், மின்சார துறையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சீர்திருத்தங்களில் ஒன்றை ஆந்திரப் பிரதேசம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ரூ 1,515 கோடியை கடனாக பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ஆந்திரப் பிரதேசத்திற்கு செலவினங்கள் துறை வழங்கியுள்ளது.

 

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் அம்மாநில அரசுக்கு மிகவும் தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் கிடைத்துள்ளன.

மின்சாரத் துறை சீர்திருத்தங்களைத் தவிர, ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற சீர்திருத்தங்களையும் ஆந்திரா செய்துள்ளது.

இதன் காரணமாக, ரூ 9,190 கோடி நிதி திரட்டும் அனுமதியும் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இது வரை, நான்கில் ஒரு சீர்திருத்தத்தையாவது 16 மாநிலங்கள் செயல்படுத்தியுள்ளன. இதில், 12 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தத்தையும், 11 மாநிலங்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் சீர்திருத்தங்களையும், ஐந்து மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகள் சீர்திருத்தங்களையும், இரண்டு மாநிலங்கள் மின்சாரத் துறை சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், ரூ 73,257 கோடி கூடுதல் கடனாக பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695188

-----


(Release ID: 1695296) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Hindi