உள்துறை அமைச்சகம்
விவசாயிகள் போராட்டம், சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அறிவிப்பு
Posted On:
03 FEB 2021 4:42PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கீழ்க்கண்ட தகவல்களை தெரிவித்தார்:
• தேசிய தலைநகரின் எல்லைகளான காசிப்பூர், சில்லா, டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய பகுதிகள் விவசாயிகளின் போராட்டத்தால் தடைசெய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருப்பதுடன், தில்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் வசிப்போருக்கு இதனால் இன்னல்கள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த ஒரு போராட்டத்தின்போதும் மக்களுக்கும், அரசுகளுக்கும் நிதி இழப்பு ஏற்படும்.
சைபர் குற்றங்கள்:
• இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து இருப்பதன் வாயிலாக சைபர் குற்றங்களும் பெருமளவில் உயர்ந்துள்ளன. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் ஆய்வுப்படி கடந்த 2017 ஆம் ஆண்டு 21,796 ஆக இருந்த இணையதள குற்றங்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டு 44,546 ஆக உயர்ந்துள்ளது.
• சைபர் உள்ளிட்ட குற்றங்களின் தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு மாநிலங்கள் பொறுப்பு வகிக்கின்றன. சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட அமலாக்க முகமைகள் போதிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.
• சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு இது தொடர்பான போதிய விழிப்புணர்வு, ஆலோசனைகளை வழங்குவதுடன் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு/பயிற்சிகளும், சைபர் தடயவியல் வசதிகளையும் அளிக்கின்றது.
• சைபர் குற்றங்கள் பற்றிய புகார்களை தெரிவிக்க குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை பதிவு செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட தாக்கம்:
• அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன.
• இதன் காரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிமைகளும் மத்திய சட்டங்களின் பலன்கள் அனைத்தையும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியின் மக்களும் முழுமையாக பெற்று மகிழ்கிறார்கள்.
• இந்த மாற்றத்தினால் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களிலும் சமூக பொருளாதார மேம்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மக்களுக்கு அதிகாரமளித்தல், சமமான சட்டங்கள், போன்ற முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு இந்த யூனியன் பிரதேசங்கள் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிராக தடியடி:
• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது பட்டியலில் பொது ஒழுங்கும், காவலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை, குற்றங்களை பதிவு செய்தல், குற்றவாளிக்கு தண்டனையை வழங்குதல், உயிரையும் உடமையையும் பாதுகாத்தல் உள்ளிட்டவை அடங்கிய சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் முதன்மையான பொறுப்பு.
• தேசிய தலைநகர பிராந்தியமான தில்லியை பொருத்தவரையில், தில்லியின் எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்களில் ஏராளமான விவசாயிகள் தடைகளை மீறி தில்லியில் நுழைய முயன்றதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
• அவர்கள் மோதலில் ஈடுபட்டதோடு அரசின் பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து மக்கள் பணியாளர்களை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்து காவல்துறையினரின் மீது தாக்குதல்களையும் நடத்தினர்.
• மேலும் கொரோனா சமூக இடைவெளியை பின்பற்றாமலும், எண்ணற்ற போராட்டக்காரர்கள் முகக் கவசங்கள் அணியாமலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, லேசான தடியடி போன்றவற்றை டில்லி காவல்துறையினர் கூட்டத்தினர் மீது உபயோகிக்க வேண்டியதாயிற்று.
ஜம்மு காஷ்மீருக்கான ஊக்குவிப்பு தொகுப்பு:
• ஜம்மு-காஷ்மீர் அரசு வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்காக ரூ. 1,352.99 கோடியை தொகுப்பு நிதியாக வழங்க 2020 செப்டம்பர் 25-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.
• 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரூ. 434.08 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது, இதில் ரூ. 250 கோடி பொருளாதார தொகுப்பாகவும், ரூ.184.08 கோடி கொவிட்-19 நிவாரணமாகவும் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 434.08 கோடி முழுவதும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694783
-----
(Release ID: 1694944)
Visitor Counter : 284