அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மாணவர்களிடையே அறிவியல் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பது இன்ஸ்பயர் திட்டத்தின் நோக்கம்: மாநிலங்களவையில் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 02 FEB 2021 6:04PM by PIB Chennai

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் சார்ந்த படிப்புகளை படிப்பதற்காக, அவர்களை ஊக்குவிக்கவும் திறமையானவர்களுக்கு பயிற்சி வழங்கவும் அதன் வாயிலாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த துறைகளில் அவர்கள் பணிபுரிந்து நாட்டில் ஆராய்ச்சி மற்றும்  மனிதவள மேம்பாட்டு ஆற்றலை விரிவுபடுத்தி தரமான மனித வளத்தை கட்டமைக்கும் நோக்கத்துடன் இன்ஸ்பயர் திட்டம் பயன்படுத்தப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்  டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார்  1,23,024 இளம் மாணவர்கள் இன்ஸ்பயர் விருதை பெற்றுள்ளதாகவும், 69,800 மாணவர்கள் இன்ஸ்பயர் பயிற்சித் திட்டத்தின் மூலம் அறிவியல் சார்ந்த செயல்முறைக் கல்வியை பெற்றதாகவும், 34,801 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான உதவித்தொகையை பெற்றிருப்பதாகவும், 2520 மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கான இன்ஸ்பயர் உதவித் தொகையையும், 397 இளம் ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் ஆசிரியர்களுக்கான உதவித்தொகையையும் பெற்றிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மகளிர் தொழில்முனைவோரின் புதுமையான திட்டங்கள்:

கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவரான டாக்டர் ராதிகா ஸ்ரீவஸ்தவா, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார சேவைகளை வழங்கும் யூனிவேர்ல்டு கேர் என்ற புதுமை நிறுவனத்தை உருவாக்கினார். பொது ஊரடங்கு காலத்தில் பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பை குணப்படுத்துவதற்காக டிஜிட்டல் சுகாதார தளங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் இந்திய தொழில்நுட்பக் கழகம், புதுதில்லியும் இணைந்து புதுமை நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கான தொழில் முனைவோர் மற்றும் அதிகாரமளித்தல் பயிற்சித் திட்டத்தின் மூலம் டாக்டர் ராதிகா ஸ்ரீவஸ்தவா பயிற்சி வழங்கினார். இவரைப் போல ஏராளமான பெண்கள் நவீன தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களிலும், இயற்கை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வெற்றி அடைந்து  வருகின்றனர்.

சூரிய மின்சக்தியில் இயங்கும் உயிரி டீசல் தொகுப்புத் திட்டம்:

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்- வேளாண் இயந்திரங்களுக்கான மையம் (சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ-சிஓஇஎஃப்எம்) ஆகியவை இணைந்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சிஓஇஎஃப்எம் மையத்திற்கு 24X7 மின்சாரத்தை வழங்குவதற்காக 50 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் உயிரி டீசல் தொகுப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இதனை பிப்ரவரி 1-ஆம் தேதி சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ இயக்குனர் பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் இராணி துவக்கி வைத்தார். இதுபோன்ற தனித்துவம் வாய்ந்த திட்டங்கள் தொலைதூர பகுதிகள், கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் தடையற்ற மின்சாரம் கிடைக்க உதவிகரமாக இருக்கும் என்று டாக்டர் இராணி தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தின் உதவியால் பெண் நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர்:

உத்தரப் பிரதேசத்தின் தேராயில் உள்ள துத்வா புலிகள் சரணாலய பகுதியைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த 2020-ஆம் ஆண்டு தங்களது நெசவுத்தொழிலில் அதிக வருவாயை ஈட்டியுள்ளனர். பாரம்பரிய தறிகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை இந்த சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மேற்கொண்டதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தாரா திட்டத்தின் மூலம் இந்த தொழில்நுட்ப மாற்றங்களுக்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694486

-----


(Release ID: 1694615) Visitor Counter : 220