பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை வென்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடல்


விருது பெற்றவர்களுக்கு அவர்களது சாதனைகளுக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்

Posted On: 25 JAN 2021 3:59PM by PIB Chennai

பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை வென்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி  காணொலி மூலம் உரையாடினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிதி ஜூபின் இரானி இந்நிகழ்வின் போது உடனிருந்தார்.

தேசிய பால புரஸ்கார் விருதுகளை

வென்றர்களை அவர்களது சாதனைகளுக்காக பாராட்டிய பிரதமர், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்த வருடம் இவர்கள் விருதுகளை வென்றிருப்பது மிகவும் முக்கியமானது என்றார். தூய்மை இயக்கம் போன்ற பழக்கங்களை மாற்றும் பிரச்சாரங்களில் குழந்தைகளின் பங்களிப்பை உரையாடலின் போது பிரதமர் அங்கீகரித்தார். பெருந்தொற்றின் போது கைகழுவும் பிரச்சாரம் போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட்ட காரணத்தால் மக்களின் கவனத்தை அது பெற்று, வெற்றி அடைந்தது என்றும் அவர் கூறினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வருடம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

ஒரு சிறிய சிந்தனை சரியான செயல்களோடு சேரும்போது அதன் விளைவு சிறப்பானதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். செயல்படுவதில் நம்பிக்கை வைக்குமாறு குழந்தைகளை கேட்டுக் கொண்ட பிரதமர், சிந்தனைகளும் செயல்பாடுகளும் இணையும்போது மிகப்பெரிய விஷயங்களை நோக்கி மக்களுக்கு அவை ஊக்கமளிக்கும் என்றார். இது வரை பெற்ற வெற்றிகளுடன் நின்று விட வேண்டாம் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்திய பிரதமர், தங்களது வாழ்க்கையில் இன்னும் சிறப்பாக அவர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மூன்று விஷயங்களை, மூன்று உறுதிகளை மனதில் வைத்துக் கொள்ளுமாறு குழந்தைகளை பிரதமர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது முதலாவதாகும். செயல்படும் வேகத்தில் எந்தவிதமான தொய்வும் இருக்கக் கூடாது. நாட்டுக்கான உறுதி இரண்டாவது ஆகும். நாம் நாட்டுக்காக பணியாற்றினால்நம்மை விட நாம் செய்யும் பணி சிறப்பானதாக இருக்கும். சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டில் நாம் நுழையும் இந்த நேரத்தில் நாட்டுக்காக என்ன செய்யமுடியும் என்று சிந்திக்குமாறு குழந்தைகளை அவர் கேட்டுக்கொண்டார். எளிமையாக இருப்பது மூன்றாவது உறுதியாகும். ஒவ்வொரு வெற்றியும் நாம் இன்னும் பணிவுடன் இருப்பதற்கு ஊக்கமளிக்க வேண்டும். நம்முடைய பணிவின் காரணமாக மற்றவர்கள் நமது வெற்றியை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 

பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை வென்றவர்களுடன் உரையாடியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் திருமதி ஸ்மிதி ஜூபின் இரானி, ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுடன் உரையாடி கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்ததாகட்டும், தேர்வுகள் குறித்த உரையாடலின் போது மாணவர்களின் சுமைகளை பகிர்ந்து கொண்டதில் ஆகட்டும், பிரதமரின் அனைத்து நிகழ்ச்சிகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்று  தன்னுடைய துவக்க உரையின் போது அவர் கூறினார். 30 வருடங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் திட்டத்தைப் பற்றி பேசிய அவர், இத்திட்டத்தின் பலன்களை பெற்றுள்ள பெண் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இன்றைக்கு இருப்பதாக கூறினார். விருதுகளை பெற்றுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார் விருது பெற்றவர்கள் குறித்த விளக்கக்காட்சி நிகழ்ச்சியின் போது திரையிடப்பட்டது.

பிரதமரின் தேசிய சிறார் விருது 32 குழந்தைகளுக்கு இந்த வருடம் வழங்கப்பட்டது. புதுமைகள், கல்வி சார்ந்த விஷயங்கள், விளையாட்டு, கலை, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் வீரதீர செயல்களில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 32 மாவட்டங்களில் இருந்து இந்த குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலை மற்றும் கலாச்சாரத்திற்கு 7 விருதுகளும், புதுமைகளுக்கு 9 விருதுகளும், கல்வி சார்ந்த சாதனைகளுக்கு ஐந்து விருதுகளும், விளையாட்டு பிரிவில் 7 விருதுகளும், வீரதீர செயல்களுக்காக மூன்று விருதுகளும் சமூக சேவைக்காக ஒரு விருதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. விருது வென்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பதக்கம், ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு பட்டயம் வழங்கப்படும்.

விருது வென்றவர்கள் குறித்த விவரங்கள் பட்டய குறிப்பேட்டில் இருக்கும். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்:

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692175

**********************



(Release ID: 1692285) Visitor Counter : 126