தேர்தல் ஆணையம்
11-வது தேசிய வாக்காளர் தினம்: 2 தனித்துவமான புதிய சேவைகள் அறிமுகம்
Posted On:
25 JAN 2021 4:50PM by PIB Chennai
11-வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார். மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் திரு சுசில் சந்திரா, திரு ராஜீவ்குமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வுமிக்கவர்களாகவும் பாதுகாப்பு, தகவல் அறிந்தவர்களாக உருவாக்குவதே இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருளாகும்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வாக்குரிமைக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வாக்குரிமை சாதாரண உரிமை அல்ல; உலகெங்கும் உள்ள மக்கள் இந்த உரிமைக்காக போராடுகின்றனர். சுதந்திரம் அடைந்ததிலிருந்து நமது அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் மதம், இனம், சாதி பாகுபாடின்றி வாக்குரிமையை அளித்துள்ளது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் இந்தியாவை தோற்றுவித்தவர்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான கட்டமைப்பை உருவாக்கியதாகத் தெரிவித்தார். கொவிட்-19 பரவல் காலக்கட்டத்திலும் நேர்மையான, பாதுகாப்பான தேர்தல்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் போன்றோர் நடத்தியதாக அமைச்சர் கூறினார்.
வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தபால் வாக்குப்பதிவு முறை வழங்கப்பட்டதை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா நினைவு கூர்ந்தார்.
வாக்காளர்களின் பங்களிப்பை, குறிப்பாக புதிய வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காக 11-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதாகத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா தெரிவித்தார். வரவேற்புரை நிகழ்த்திய தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், பல்வேறு சவால்களுக்கு இடையேயும் இந்திய தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படுவதாகக் கூறினார்.
டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன. வாக்காளர் உதவி கைப்பேசி செயலி (Voter Helpline Mobile App) வாயிலாகவும், www.voterportal.eci.gov.in, www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளை தரவிறக்கம் செய்துகொண்டு, அச்சிட்டுக் கொள்ளலாம். 5 புதிய வாக்காளர்களுக்கு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை புதிய வாக்காளர்களும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், ‘வானொலி ஹலோ வாக்காளர்கள்' (Radio Hello Voters) என்ற 24x7 இணையதள டிஜிட்டல் வானொலி சேவையையும் தொடங்கி வைத்தார். அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், 3 வெளியீடுகளை அறிமுகப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692194
**********************
(Release ID: 1692270)
Visitor Counter : 242