உள்துறை அமைச்சகம்
மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு சபையின் 69-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்
Posted On:
23 JAN 2021 7:53PM by PIB Chennai
மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இன்று நடைபெற்ற வடகிழக்கு சபையின் 69-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி 2014-இல் பதவியேற்ற போது, வட கிழக்கு பிராந்தியம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால்
அரசின் அனைத்து விதமான வளர்ச்சி திட்டங்களிலும் வட கிழக்குப் பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார் என்று தன்னுடைய துவக்க உரையில் திரு அமித் ஷா தெரிவித்தார்.
15 நாட்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சர்களில் யாராவது ஒருவர் வடகிழக்கு பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டதாக கூறிய அவர், இதுவரை 40 தடவைக்கும் அதிகமாக திரு நரேந்திர மோடியே நேரடியாக வடகிழக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டதாகவும், 300 முறை அமைச்சர்கள் வந்து சென்றதாகவும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திரமோடி வட கிழக்கு பகுதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு வகையிலும் இன்று முக்கியமான நாள் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம் என்று கூறினார்.
நாட்டை 5 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றுவதற்கு வட கிழக்கு பிராந்தியம் முக்கிய பங்காற்றும் வகையில் அதை முன்னேற்றுவதற்கு இந்திய அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான தற்சார்பு இந்தியா என்பது வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சி அடையாமல் சாத்தியமாகாது என்றார்.
அபிரிதமான இயற்கை வளம் வடகிழக்குப் பகுதியில் உள்ளதாக தெரிவித்த திரு ஷா, சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும் வல்லமை இந்த பகுதிக்கு உள்ளதாக கூறினார்.
திரு மோடி பிரதமரான பிறகு வடகிழக்கு சபையின் முக்கியமான பங்குக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது என்றும் அதன் மூலமாக 11 ஆயிரம் கிலோமீட்டர்கள் நீளத்திற்கு சாலைகள் போடப்பட்டதாகவும் 7700 மெகாவாட் மின்சார உற்பத்தி சாத்தியமாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
பங்களாதேஷ் உடனான எல்லை சார்ந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளதாகவும் மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் சம்மான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூபாய் 553 கோடி செலுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். வட கிழக்குப் பிராந்தியம் கொரோனாவை மிகச்சிறப்பாக எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691673
*************************
(Release ID: 1691723)
Visitor Counter : 125