தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு நமது உண்மையான கவனமும், அக்கறையும் தேவை: தேன் இயக்குநர் கணேஷ் விநாயக்

 “ஒருவரது அன்புக்குரியவரின் உடலை அவர்களது தொலைதூர கிராமத்திற்கு எடுத்து செல்ல பணம் கேட்கிறார் மருத்துவமனையின் அவசர ஊர்தி ஓட்டுநர். அவரது கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அந்த நபர், உடலை தனது தோளில் சுமந்து கொண்டே இறுதி சடங்குகளுக்காக கிராமத்தை நோக்கி செல்கிறார். நெஞ்சைத் தொடும் உண்மை கதை இது. அந்த நபரும், அவரது மகளும் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்கண்ட உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை தேன் திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயக் கூறினார். 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார். 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமாவிலும், சர்வதேச போட்டி பிரிவிலும் அவரது படம் இடம் பெற்றது.

 

நீலகிரி காட்டில் உள்ள குறிஞ்சிக்குடி என்னும் மலை கிராமத்தில் வாழும் வேலு என்னும் தேனீ வளர்ப்பாளரின் கதையை தேன் கூறுகிறது.

இப்படத்தை எடுக்க தன்னை தூண்டிய விஷயங்கள் குறித்து பேசிய விநாயக், “இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் வாழும் முத்துவன் பழங்குடியினரில் சிலருக்கு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டது.

அவர்களது அனுபவங்கள் என்னை பாதித்து, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மலைப் பகுதியில் வாழும் சிறிய சமூகத்தை குறித்து என்னை எழுதத் தூண்டின. ஒழுங்கான சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் அல்லது இதர அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு இல்லை.

மேலும் பேசிய அவர், “சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட இனத்தின் கதையை வெளிக்கொண்டு வர நான் முயற்சித்துள்ளேன். போக்குவரத்து கூட இல்லாமல் அவர்கள் கடினமான மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். நாட்டில் உள்ள இதர பழங்குடியினரின் நிலைமை குறித்து எனக்கு தெரியாத போதிலும், முத்துவன் பழங்குடியினரைப் போன்றே அவர்களும் துன்பங்களை அனுபவிப்பார்கள் என நான் நினைக்கிறேன்,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691208

**********************


(Release ID: 1691417) Visitor Counter : 265