புவி அறிவியல் அமைச்சகம்

தில்லி மண்டலத்தில் நில நடுக்க கண்காணிப்பு, நிலத்தடி கட்டமைப்புகளின் வரையறை

Posted On: 05 JAN 2021 9:59AM by PIB Chennai

தில்லி மண்டலத்தில் ஏற்படும் நில நடுக்கங்களைக் கண்காணித்து, நிலத்தடி கட்டமைப்புகளை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்  தேசிய நில நடுக்க ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது.

இது குறித்து இந்த மையம் கூறியதாவது:

தில்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 4 சிறிய நில நடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகள் பதிவானது. இதைத் தொடர்ந்து 3 புள்ளிகளுக்குக் குறைவான பல அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த அனைத்து இடங்களையும் தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அடையாளம் கண்டது. இந்த நில நடுக்கங்கள் வடகிழக்கு தில்லி எல்லை, ஹரியானாவின் கிழக்கு ரோதக், கிழக்கு  ஃபரிதாபாத்  ஆகிய இடங்களில் மையம் கொண்டிருந்தன.

கடந்த மே 10ம் தேதி ஏற்பட்ட, இரண்டாவது நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகள் பதிவானது. இதையடுத்து இந்த அதிர்வுகள் குறித்து நிபுணர்களுடன் புவி அறிவியல் அமைச்சகம் விரிவான ஆலோசனை நடத்தியது.

தில்லியிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும், நில நடுக்க ஆதாரங்களை வகைப்படுத்த வேண்டும் எனவும், நில நடுக்கத்தை ஏற்படுத்தும் நிலத்தடி கட்டமைப்புகளின்  குறைபாடுகளை வரையறை செய்ய வேண்டியது அவசியம் எனவும் உணரப்பட்டது. பாறை அமைப்புகளில் உள்ள முறிவுதான் இந்த குறைபாடு.

 

இதற்காக குறைபாடுகள் உள்ள தில்லி சுற்றுவட்டாரப் பகுதியில் 11 தற்காலிக கூடுதல் நில நடுக்க ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நில நடுக்கத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்வதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மையங்களில் இருந்து பெறப்படும் தரவுகள், இப்பகுதியில் ஏற்படும் சிறிய நில நடுக்கங்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. நில நடுக்க ஆய்வு மையங்கள் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் நில நடுக்க மையத்தின் துல்லியத்தைக் கண்டறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 தில்லி மண்டலத்தில் மேக்னடோ-டெல்டூரிக் என்ற புவிஇயற்பியல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேக்னடோ-டெல்டூரிக் என்பது ஒரு புவி இயற்பியல் முறையாகும், இது நிலத்தடி கட்டமைப்பையும், செயல்முறைகளையும் புரிந்துகொள்ள, பூமியின் காந்த, மின்னணு புலங்களின் இயற்கையான நேர மாறுபாட்டைப் பயன்படுத்துகிறது. இந்த அளவீடு பாறைகளில் குறைபாடுகள் உள்ள மகேந்திரகர்-டேராடூன், சோனா, மதுரா பகுதியில் நடத்தப்படுகிறது.

இந்த அளவீடுகள்  நிலத்தடியில் திரவத்தின் இருப்பைக் கண்டறியும். இவைதான், நில நடுக்கம் ஏற்படும் சாத்தியங்களை அதிகரிக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, டேராடூனில் உள்ள  இமாலயன் புவியியல் வாடியா மையத்துடன் கூட்டு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு மற்றும் குறைபாடுகளை  கண்டறிவதற்கான  புவியியல் புல ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை நில அதிர்வு அபாயத்தை துல்லியமாக மதிப்பிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தகவல்கள், நில நடுக்கத்தைத் தாங்கக் கூடிய கட்டிடங்களைக் கட்டவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பான ஆய்வை, ஐஐடி கான்பூருடன் இணைந்து தேசிய நில நடுக்க ஆய்வியல் மையம் மேற்கொள்கிறது.

 

இது தொடர்பான கள ஆய்வுகள், புவி இயற்பியல் மற்றும் புவியியல் ஆய்வுகள் 2021 மார்ச் 31ம் தேதி நிறைவடையும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686171

 

************


(Release ID: 1686274) Visitor Counter : 202