பாதுகாப்பு அமைச்சகம்

நிறுவன நாளைக் கொண்டாடியது டிஆர்டிஓ

Posted On: 01 JAN 2021 5:52PM by PIB Chennai

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இன்று தனது 63வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இதை முன்னிட்டு டிஆர்டிஓ தலைவர் டாக்டர். ஜி. சதீஷ் ரெட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆகாஸ் ஏவுகணை மாதிரியைப் பரிசளித்தார். இது சமீபத்தில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, டிஆர்டிஓ பவனில், டாக்டர் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு, டிஆர்டிஓ தலைவர் மற்றும் இயக்குநர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

டிஆர்டிஓ கடந்த 1958ஆம் ஆண்டு 10 பரிசோதனைக் கூடங்களுடன் தொடங்கப்பட்டது. இன்று ராணுவத் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான பிரிவுகளுடன் டிஆர்டிஓ செயல்படுகிறது. நிறுவன தினத்தை முன்னிட்டு டிஆர்டிஓ ஊழியர்களுக்கு டிஆர்டிஓ தலைவர் டாக்டர். ஜி. சதீஷ் ரெட்டி  வாழ்த்து தெரிவித்தார். நாட்டுக்காக புதிய தளவாடங்களை உருவாக்கவும், தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு பங்களிக்கும் படியும் அவர் டிஆர்டிஓ விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டார். டிஆர்டிஓ 2020ஆம் ஆண்டில் பல சாதனைகள் படைத்தாகவும், டிஆர்டிஓ தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதே, 2021ஆம் ஆண்டின்  குறிக்கோளாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

ராணுவ மருத்துவச் சேவைப் பிரிவுக்கு புதிய தலைமை இயக்குநர்:

ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக மருத்துவர் வைஸ் அட்மிரல் ராஜத் தத்தா இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் கடற்படை மருத்துவச் சேவைகள் பிரிவு மற்றும் தில்லி ராணுவ மருத்துவமனை கமாண்டன்டாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685407

 

----(Release ID: 1685481) Visitor Counter : 223