உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்-ஜெய் செகாத் சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா பாராட்டு

Posted On: 26 DEC 2020 7:58PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஜம்மு காஷ்மீரில் பிரதமர்-ஜெய் செகாத் சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைத்த இத்திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட திரு அமித் ஷா, ஜம்மு காஷ்மீருக்கு இன்றைய தினம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, புனிதமான நாள் என்று குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதால் இது ஒரு மிகப்பெரிய தொடக்கம் என்று அமைச்சர் கூறினார்.

இதற்காக மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா ஆகியோரை நான் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன் என்று திரு அமித் ஷா கூறினார்.

வரும் நாட்களில் ஜம்மு காஷ்மீரின் சுகாதாரத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை முக்கியமான இந்தத் தொடக்கம் கொண்டு வரும். ரூ. 5 இலட்சம் மதிப்புள்ள அனைத்து சுகாதார வசதிகளும் சுமார் 15 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மீது பிரதமருக்கு உள்ள அக்கறையின் காரணமாக நாளை முதல் ஒவ்வொரு காஷ்மீரியும் இத்திட்டத்தின் பலனை அனுபவிக்க இருப்பதாக அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் சுகாதாரத்துறை உள்கட்டமைப்புக்கு இந்தத் திட்டம் மேலும் ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக புதிய தனியார் மற்றும் சிறந்த மருத்துவமனைகள் அங்கு வரவிருக்கின்றன என்று அமைச்சர் மேலும் கூறினார்.

சிறப்பு மருத்துவச் சேவைகளுக்காக

 ஜம்மு காஷ்மீரைத் தாண்டி ஜம்மு காஷ்மீர் மக்கள் பயணம் செய்யத் தேவை இருக்காது என்கிற நிலை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரையில், வளர்ச்சி, அனைத்து பிரிவு மக்களுக்கும் ஜனநாயகத்தை கொண்டு வருவது, பாதுகாப்பு, அமைதி மூலம் வளர்ச்சியை உறுதி செய்வது ஆகிய மூன்று விஷயங்களின் மீது பிரதமர் சிறப்பு கவனம் செலுத்துகிறார் என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து இந்த மூன்று துறைகளில் மிகவும் சிறப்பாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பணியாற்றியதாக திரு.அமித் ஷா தெரிவித்தார். அனைத்துத் திட்டங்களும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நிறைந்த பலன்களை இவை தந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683873

                                                              ------


(Release ID: 1683907) Visitor Counter : 133