அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020: பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தூதர்களுடன் அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் பேச்சு
Posted On:
24 DEC 2020 1:16PM by PIB Chennai
“அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அனைத்துத் தடைகளையும் தகர்க்கிறது. இந்தியத் தத்துவமான வசுதேவக் குடும்பகம்- உலகமே ஒரு குடும்பம் என்பதையும் இது நிரூபிப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த உணர்வு அனைவரையும் உள்ளடக்கிய எங்களது பண்டைய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது”, என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல் வெளிநாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் தூதர்களின் மாநாட்டில் ஆப்கானிஸ்தான், கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் இதர நாடுகளின் தூதர்களுடன் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திறனை 21-ஆம் நூற்றாண்டின் அறிவுசார்ந்த பொருளாதாரத்திற்கு நாங்கள் அளிக்கும் ஒத்துழைப்பின் முக்கியமான தூணாக மாற்றும் முறையை நாங்கள் கற்றறிந்துள்ளோம்”, என்று அவர் கூறினார்.
“நோய் மேலாண்மைக்கு உதவும் பொருள்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாமல், எதிர்காலப் பரவலுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு பேருதவியாக இருக்கும் என்ற நமது நம்பிக்கையை கோவிட்-19 பரவல் மேலும் வலுவூட்டியுள்ளது”, என்று அமைச்சர் குறிப்பிட்டார். “பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் மதிநுட்பம் மற்றும் அறிவியலின் சான்றுகளைச் சார்ந்து அமைந்தவை”, என்றார் அவர். கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்த அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன், “தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பது, பரிசோதனையின் எண்ணிக்கையை விரைவு படுத்துவது ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பின் முக்கிய கட்டங்களில் உள்ளன. தடுப்பு மருந்து உற்பத்தியில் உலகளவில் மிகப்பெரும் தயாரிப்பாளர்களுள் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
“டிஜிட்டல்மயமாக்கலில் இந்தியா முன்னிலை வகிப்பதோடு, குடிமக்களின் நன்மைக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தலாம் என்பதை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியவும் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன” என்று அவர் கூறினார்.
கோவிட்- 19-க்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டிய உஸ்பெகிஸ்தான் நாட்டு அமைச்சர், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியாவுடன் உஸ்பெகிஸ்தானும் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான், மியான்மார், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு இந்தியாவின் உதவியையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆதரவையும் கோரியதுடன், தங்கள் நாட்டு மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பெறுவதற்கு அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683277
------
(Release ID: 1683359)
Visitor Counter : 222