திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இந்தியா-பிரான்ஸ் கூட்டு முயற்சியில், மின்துறைத் திறன் மேம்பாட்டுக்கான முதல் சிறப்பு மையம் ஹரியானாவில் தொடக்கம்
Posted On:
18 DEC 2020 6:02PM by PIB Chennai
ஹரியானாவில் உள்ள தேசிய சூரிய மின்சக்தி மைய வளாகத்தில் திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படுவதை மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், பிரான்ஸ் கல்வி மற்றும் இளைஞர் திறன் மேம்பாடு அமைச்சகம் இன்று அறிவித்தது.
இங்கு மின்துறை மற்றும் சூரிய மின்சக்தித் துறையில் தரமான பயிற்சியாளர்கள் உருவாக்கப்படவுள்ளனர். இந்த சிறப்பு மையத்தில் எதிர்காலத் தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு நவீன பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது எரிசக்தித் துறையில், இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.
மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ் குமார் சிங், பிரான்ஸ் பொருளாதாரத்துறை அமைச்சர் திரு டேனியல் மைத்ரே முன்னிலையில் இந்த சிறப்பு மையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மின்சாரம் மற்றும் சூரிய மின்சக்தித் துறையில் உயர்நிலை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை மேற்கொள்வதற்காக, இந்தியா-பிரான்ஸ் இடையே முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு ராஜ் குமார் சிங் பேசுகையில், ‘‘ பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்ற சவால்களைக் குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வளர்ச்சி அதிகரிப்பதை நோக்கி தொடர்ச்சியான முயற்சிகள், பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்கு வகிக்கும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681757
**********************
(Release ID: 1681818)
Visitor Counter : 245